தமிழரின் பெயரை மகனுக்கு வைத்த எலான் மஸ்க்- யார் அந்த சந்திரசேகர்?
நோபல் பரிசு வென்ற தமிழரான சந்திரசேகரின் நினைவாக தனது மகனுக்கு எலான் மஸ்க் சேகர் என பெயர் சூட்டியுள்ளார்.
மகனுக்கு தமிழரின் பெயரை வைத்த எலான் மஸ்க்
உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்.

இவர், டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ்எக்ஸ், நியூரோலிங்க் போன்ற பல்வேறு நிறுவனங்களை தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.

சமீபத்தில் நிகில் காமத் உடன் பாட் காஸ்ட் ஒன்றில் பேசிய எலான் மஸ்க், "தனது மனைவி ஷிவோன் சிலிஸ்(Shivon Zilis) இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், மகன்களில் ஒருவருக்கு, நோபல் விருது வென்ற சந்திரசேகர் நினைவாக சேகர் என பெயர் வைத்தோம் எனவும் கூறினார்.
யார் இந்த சந்திரசேகர்?
இந்திய வம்சாவளி அமெரிக்கரான சுப்பிரமணியன் சந்திரசேகர்,1983 ஆம் ஆண்டு விண்மீன்கள் பற்றிய ஆய்வு காரணமாக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

சந்திரசேகர் 1910 ஆம் ஆண்டில், சுப்பிரமணியன் ஐயருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும் முதல் மகனாக லாகூரில் பிறந்தார்.
இவரின் தந்தை, இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் அரசு பணியில் அதிகாரியாக பணியாற்றினார். லாகூரில் 5 வருடங்களும், லக்னோவில் 2 வருடங்களும் வாழ்ந்தபின், அவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது.

திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியை பயின்றார். அதன் பின்னர், சென்னை மாநில கல்லூரியில், மேல்படிப்பும், 1927ஆம் ஆண்டில் இளங்கலை (B.A. Honours) இயற்பியல் படிப்பையும் தொடர்ந்தார்.
1928 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் (Arnold Sommerfeld) இந்தியா வந்திருந்த போது, சென்னையில் மாநிலக் கல்லூரியில் உரை ஆற்றினார்.

ஏற்கனவே அவரின் புத்தகத்தை படித்திருந்த சந்திரசேகருக்கு அவரின் உரை இயற்பியலின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. அதைர்தொடர்ந்து அடுத்தடுத்து தனது ஆராய்ச்சிக்கட்டுரைகளை வெளியிட்டார்.
1930 ஆம் ஆண்டில் இந்திய அரசின் பண உதவியுடன் மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.

1930 ஆம் ஆண்டில் இவரது சித்தப்பாவான சர். சி. வி. இராமன் , இராமன் ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
மாநில கல்லூரியில் தன்னுடன் படித்த லலிதா துரைசாமி என்பவரை 1936 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

1953 ஆம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமை பெற்றார். அதன் பின்னர் தனது விண்மீன்கள் பற்றிய ஆய்வுக்காக நோபல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றார்.
1995 ஆம் ஆண்டில் மாரடைப்பு காரணமாக சிகாகோ பல்கலைக்கழக மருத்துவமனையில் காலமானார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |