அமெரிக்காவின் புதிய அதிபரிடமிருந்து முதல் தொலைபேசி அழைப்பைப் பெறப்போகும் தலைவர் இவர்தானாம்!
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் முதலில் தொலைபேசியில் உரையாடப்போவது யாருடன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
புதிதாக ஒரு அதிபர் பதவியேற்றதும், அவரை எந்த நாட்டின் தலைவர் முதலில் வாழ்த்தினார், அவர் எந்த நாட்டுத் தலைவருடன் முதலில் பேசினார் என்பது போன்ற விடயங்கள் கவனிக்கப்படுவது வழக்கம், குறிப்பாக பிரித்தானியர்களிடம்... அந்த முறையில், பிரித்தானிய மகாராணியார் தொடங்கி பல நாட்டுத் தலைவர்கள் அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்நிலையில், ஜோ பைடன் முதலில் தொலைபேசியில் அழைத்து பேச இருப்பது கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவைத்தான் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை, ஜோ பைடனின் ஊடகச் செயலரான Jen Psaki வெளியிட்டுள்ளார். ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதுமே, முதல் ஆளாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்தான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஆகவே, போரிஸ் ஜான்சனுடன்தான் ஜோ பைடன் முதலில் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையளித்துள்ளது.
முன்னாள் அதிபர் ட்ரம்பின் நான்கு ஆண்டு கால ஆட்சிக்காலத்தின்போது உறவுகள் பாதிக்கப்பட்ட நட்பு நாடுகளுடன் மீண்டும் உறவுகளை புதுப்பித்துக்கொள்ளும் வகையில்தான் ஜோ பைடனின் அடுத்தடுத்த தொலைபேசி அழைப்புகள் இருக்கும் என அவரது ஊடகச் செயலரான Jen Psaki தெரிவித்துள்ளார்.


