திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா?
திருமண நிகழ்வு ஒன்றுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப், பாப் பாடகி ஜெனிபர் லோபஸ், ஜஸ்டின் பைபர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தொழிலதிபரின் மகள் திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
யார் இந்த நேத்ரா மந்தேனா?
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் இன்ஜெனஸ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜ் மந்தேனா(Rama Raju Mantena). இன்ஜெனஸ் பார்மாசூட்டிகல்ஸ் அமெரிக்காவில் நன்கு அறியப்பட்ட மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்த நிறுவனம் அமெரிக்கா மட்டுமல்லாது, சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவில் செயல்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளைக் கொண்டுள்ளது. ICORE ஹெல்த்கேர், ஆன்கோஸ்கிரிப்ட்ஸ் ஆகிய நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
இவரின் மகள் நேத்ரா மந்தேனாவின்(netra mantena) திருமண நிகழ்வுகள் நவம்பர் 21 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 24 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

உதய்பூரில் உள்ள லீலா அரண்மனை, ஜெனானா மஹால் மற்றும் பிச்சோலா ஏரியில் உள்ள தீவு அரண்மனை உள்ளிட்ட பல ஆடம்பர இடங்களில் திருமண விழாக்கள் நடைபெற உள்ளன.
கடந்த ஆண்டு உலகமே வியக்கும் வகையில் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் திருமணம், ஆண்டின் திருமணம் என கருதப்பட்டது.

அதே போல் இந்த ஆண்டின் திருமணம் என்று கருதுமளவுக்கு பல விருந்தினர்களுடன் வெகு ஆடம்பரமாக இந்த திருமணம் நடைபெற உள்ளது.
மணமகன் வம்சி காடிராஜு
மணமகன் வம்சி காடிராஜு(vamsi gadiraju), அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் சூப்பர் ஆர்டர் நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார்.

இந்த நிறுவனம், பல இடங்களில் உள்ள உணவகங்கள் டெலிவரி மற்றும் டேக்அவே சேவைகளை நெறிப்படுத்தவும், அன்றாட செயல்பாடுகளை நிர்வகிக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் 30 வயதுக்குட்பட்ட 30 பட்டியலில் (உணவு மற்றும் பான வகை) வம்சி காடிராஜுவும் இடம்பெற்றார்.
விருந்தினர்கள்
இந்த திருமணத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகன் ஜூனியர் டிரம்ப், ஜெனிபர் லோபஸ், டைஸ்டோ, பிளாக் காபி, சர்க்யூ டு சோலைல் மற்றும் டிஜே அமன் நாக்பால் ஆகியோர் வந்துள்ளனர்.

மேலும் பாலிவுட்டில் இருந்து ஹிருத்திக் ரோஷன், ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், ஜான்வி கபூர், கரண் ஜோஹர், கிருதி சனோன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மாதுரி தீட்சித் நேனே, நோரா ஃபதேஹி, தியா மிர்சா, அமிரா தஸ்தூர் மற்றும் சோஃபி சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |