புதிய போப் ஆண்டவர் யார்? எப்படி தேர்வு செய்யப்படுவார் தெரியுமா?
புதிய போப் ஆண்டவர் எப்படி தேர்வு செய்யப்படுவார், அடுத்த போப்க்கான போட்டியில் யார் உள்ளனர் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
போப் மறைவு
கடந்த சில மாதங்களாகவே இரட்டை நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்று பாதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ்(pope francis), மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தனது வழக்கமான பணிகளை தொடர்ந்தார்.
இந்நிலையில், இன்று காலை 7;30 மணியளவில் போப் பிரான்சிஸ் காலமானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போப் ஆண்டவரின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலக தலைவர்கள் போப்பின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
போப்பின் ஆட்சி முத்திரையைத் தாங்கிய போப்பின் மீனவர் மோதிரம், அவரது மறைவை குறிக்கும் வகையில் உடைக்கப்படும். இதன் பின்னர் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.
போப் உடல் அடக்கம்
பாரம்பரிய முறைப்படி, செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில், உயரமான நகரக்கூடிய மேடையில், போப்பின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். மேலும் சைப்ரஸ், ஈயம் மற்றும் ஓக் ஆகியவற்றால் செய்யப்பட்ட சவப்பெட்டிகள் பயன்படுத்தப்படும்.
அதன் பின்னர் செயின்ட் பீட்டர்ஸ் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் 4 முதல் 6 நாட்கள் இறுதிச்சடங்கு நடைபெறும். பின்னர் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் உடல் அடக்கம் செய்யப்படும்.
ஆனால், போப் பிரான்சிஸ் பாரம்பரிய முறையில் இருந்து விலகி, 2022 ஆம் ஆண்டு தன்னை அடக்கம் செய்வதற்கான எளிய சவப்பெட்டியை தேர்வு செய்தார். மேலும், ரோமில் உள்ள சாண்டா மரியா மாகியோர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
புதிய போப் தேர்வு
இந்நிலையில், புதிய போப் யார் அவர் எப்படி தேர்வு செய்யப்படுவார் என கேள்வி எழுந்துள்ளது.
போப் மறைந்த 15 மற்றும் 20 நாட்களுக்குள், 80 வயதுக்குட்பட்ட கார்டினல்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து போப்பாண்டவர் மாநாட்டில் கலந்து கொள்ள, வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் சேப்பலுக்கு(Sistine Chapel) வந்து சேருவார்கள்.
அதில் நடைபெறும் ரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களிப்பார்கள். புதிய போப் தேர்வு நடைமுறையில் ஈடுபடும் கார்டினல்கள் வெளி உலக தொடர்பு இன்றி இருப்பார்கள்.
மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்கும் வரை, பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். ஒரு நாளுக்கு காலை 2 முறை, மாலை 2 முறை என வாக்கெடுப்பு நடைபெறும்.
வெள்ளை புகை ஒவ்வொரு சுற்று முடிவுக்கு பின்னரும், வாக்கெடுப்பில் பயன்படுத்தப்படும் தாள்கள் எரிக்கப்படும். போப் தேர்வு செய்யப்பட்டத்தை வெளியுலகிற்கு அறிவிக்க, ஒவ்வொரு சுற்று முடிவிலும் கருப்பு அல்லது வெள்ளை நிற புகை தேவாலயத்தில் இருந்து வெளியேறும்.
கருப்பு புகை வெளியிடப்பட்டால், போப் இன்னும் தேர்வு செய்யப்பட வில்லை எனவும், வெள்ளை புகை வெளியேறினால், புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார் எனவும் பொருள்படும்.
புதிய போப் தேர்வு செய்யப்பட்ட பிறகு, இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அவருக்கு முறைப்படி கோரிக்கை வைக்கபடும். அவர் ஏற்றுக்கொண்டால், புதிய போப் ஆக அறிவிக்கப்படுவார். மேலும் ஒரு பெயரைத் தேர்ந்தெடுப்பார்.
அடுத்த போப் யார்?
அதன் பின்னர், செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் பிரதான பால்கனியில் இருந்து, வெள்ளை நிற கவசம் அணிந்து, பொதுமக்களுக்கு தனது முதல் உரையை வழங்குவார்.
அடுத்த போப் ஆண்டவருக்கான போட்டியில், ஹங்கேரியை சேர்ந்த கார்டினல் பீட்டர் எர்டோ(72), பிலிப்பைன்ஸை சேர்ந்த கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டாக்லே(67), ஆப்பிரிக்காவின் கானாவை சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன்(76), கார்டினல் பியட்ரோ பரோலின்(70) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |