பேருந்து ஓட்டுநராக இருந்து வெனிசுலா ஜனாதிபதியாக உயர்ந்தவர் - யார் இந்த நிக்கோலஸ் மதுரோ?
பேருந்து ஓட்டுநராக இருந்து வெனிசுலா ஜனாதிபதியாக உயர்ந்த நிக்கோலஸ் மதுரோ குறித்து இந்த பதிவில் காணலாம்.
வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்த அமெரிக்கா
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு இருந்து வந்தது.
இதனிடையே, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை(nicolas maduro) போதைப்பொருள் பயங்கரவாதி என குற்றஞ்சாட்டியுள்ள டிரம்ப் அரசு, அவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு 50 மில்லியன் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்தார்.

சமீபகாலமாக, போதைப்பொருள் கடத்துவதாக கூறி, வெனிசுலா கப்பல்கள் மீது அமெரிக்கா கடற்படையின் போர் கப்பல்கள் தாக்குதல் நடத்தியது.
வெனிசுலா எல்லையில், அமெரிக்கா தனது போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை குவித்து வந்தது.
இந்நிலையில், இன்று திடீரென வெனிசுலா தலைநகரில் அமெரிக்கா போர் விமானங்கள் தாக்குதலை தொடங்கியது.

இதன் மூலம், அமெரிக்கா வெனிசுலாவின் மூலோபாய வளங்களான அதன் எண்ணெய் மற்றும் கனிமங்கள் கைப்பற்றுவதே இலக்காக வைத்துள்ளதாக வெனிசுலா அரசு குற்றஞ்சாட்டியது.

மேலும், உடனடியாக நாடு முழுவதும் அவசரநிலை பிரகடன படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸும்(Cilia Flores) கைது செய்துள்ள அமெரிக்க ராணுவம், இருவரையும் வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அமெரிக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மதுரோ மற்றும் புளோரஸ் தற்போது எங்கே உள்ளார்கள் என்பதை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்குமாறு வெனிசுலாவின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்(Delcy Rodriguez) கோரிக்கை வைத்துள்ளார்.

அமெரிக்கா ராணுவ ஆக்கிரமிப்பு மூலம், வலது சாரி மற்றும் இடது சாரிக்கு இடையேயான மோதலை மீண்டும் தொடங்குவதாக ரஷ்யா ஜனாதிபதி புடின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான், கொலம்பியா, கியூபா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
யார் இந்த நிக்கோலஸ் மதுரோ?
63 வயதான நிக்கோலஸ் மதுரோ, 2013 ஆம் ஆண்டு முதல் வெனிசுலாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

பேருந்து ஓட்டுநராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கிய மதுரோ, அதன் பின்னர் ஒரு தொழிற்சங்கத் தலைவராக உயர்ந்தார்.
ஐக்கிய சோசலிசக் கட்சியில் (PSUV) உறுப்பினராக இணைந்த மதுரோ, முன்னாள் ஜனாதிபதி ஊகோ சாவேசின்(Hugo Chavez) ஆட்சியில், வெளியுறவுத்துறை அமைச்சர், துணை ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார்.

2013 ஆம் ஆண்டில், சாவேசின் மறைவிற்கு பின்னர், தற்போது வரை வெனிசுலாவின் ஜனாதிபதியாக மதுரோ பதவி வகித்து வந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |