பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் - யார் இந்த நிதின் நபின்?
பாஜகவிற்கு தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தேசிய தலைவர்
2020 ஆம் ஆண்டில் அமித்ஷாவிற்கு பின்னர், பாஜகவின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் ஜேபி நட்டா.

கட்சி விதிகளின் படி தேசியத் தலைவர் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அவரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.
தற்போது பாஜகவின் புதிய தேசிய தலைவருக்கான தேர்தல் வரும் ஜனவரி 20 ஆம் திகதி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில், பாஜக செயல் தலைவர் நிதின் நபின்(Nitin Nabin) போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான வேட்பு மனுவை வரும் ஜனவரி 19 ஆம் திகதி நிதின் நபின் தாக்கல் செய்ய உள்ளதாகவும், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களை அவரை முன்மொழிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
யார் இந்த நிதின் நபின்?
46 வயதான நிதின் நபின், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர் ஆவார். இவர் மூத்த பாஜக தலைவர் மற்றும் 4 முறை எம்.எல்.ஏ ஆக இருந்த நபி கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவார்.

தந்தையின் மறைவிற்கு பின்னனர் அரசியலில் நுழைந்த நிதின் நபின், 2006 ஆம் ஆண்டில் பாட்னா மேற்கு தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.
2010 முதல் 2025 வரை தொடர்ச்சியாக 5 முறை பங்கிபூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
தற்போது பீகார் மாநிலத்தில், சாலை போக்குவரத்துத் துறை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராக உள்ளார்.
நிதின் நபின் பாஜகவின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டால், இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் இளம் நபர் என்ற பெருமையை பெறுவார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |