யார் இந்த ஷெபாஸ் ஷெரீஃப்?
இம்ரான்கானின் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசியலின் பரபரப்பான சூழலில் 'பாகிஸ்தான் முஸ்லீம் லீக்' கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீஃப் நாட்டின் பிரதமராகியுள்ளார்.
காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட இவரது குடும்பம் எஃகு தொழில் மூலம் செல்வ செழிப்பாக வளர்ந்தது. முதலில் 'பாகிஸ்தான் ஸ்டீல்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்த ஷெபாஸ் ஷெரீஃப், 1980-களில் அரசியலில் களம் கண்டார். 1988ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணத் தேர்தலில் வெற்றிபெற்று, பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
அதனைத் தொடர்ந்து படிப்படியாக அரசியலில் வளர்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வரானார் ஷெபாஸ் ஷெரீஃப். தொழில்துறை, விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய நான்கு துறைகளில் அதிக கவனம் செலுத்திய ஷெபாஸ், மக்கள் மத்தியில் பெரிய தலைவராக உருவெடுத்தார். ஆனால் பதவிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு ஷெபாஸின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
முதல்வர் பதவியை இழந்ததுடன் சிறையிலும் அடைக்கப்பட்ட ஷெபாஸ், 2000-ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அதன் பின்னர் 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பிய அவர், 2008ஆம் ஆண்டு மீண்டும் பஞ்சாபி மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்தார்.
2017ஆம் ஆண்டு வரை மாகாண அரசியலில் ஈடுபட்டு வந்த ஷெபாஸ், அதன் பின்னர் தேசிய அரசியலில் இறங்கினார். அப்போது பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கி பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷெரீஃப், கட்சியில் இருந்தும் விலகினார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரானார் ஷெபாஸ். 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட இவரது கட்சி 82 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால், ஷெபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரானார்.
இம்ரான்கான் ஆட்சிக்கு வந்ததும், ஷெபாஸ் மீதும் அவரது மகன் ஹம்சா மீதும் பல்வேறு வழக்குகள் பாய்ந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் சில முடக்கப்பட்டன. அதன் பின்னர், 2019ஆம் ஆண்டில் ஷெபாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பல மாதங்கள் சிறையில் இருந்த அவர், 2021ஆம் ஆண்டு வெளியே வந்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தொடங்கினார். எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவும் ஷெபாஸுக்கு கிடைத்ததால், இம்ரான்கானின் அரசை கவிழ்த்து தற்போது பாகிஸ்தானின் பிரதமராகியுள்ளார்.