பாராசிட்டமால் பயன்படுத்தினால் ஆட்டிசம் பாதிப்பா? டிரம்ப்பின் கருத்துக்கு WHO மறுப்பு
பாராசிட்டமாலை ஆட்டிசத்துடன் தொடர்பு படுத்தி டிரம்ப் கூறிய கருத்துக்கு மருத்துவ அமைப்புகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
பாராசிட்டமாலை தவிர்க்க கூறிய டிரம்ப்
காய்ச்சல் மற்றும் வலியை குறைக்க பல்வேறு நாடுகளில் பாராசிட்டமால் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாராசிட்டமால் மாத்திரைகள் ஆட்டிசத்துடன் தொடர்புடையது எனக்கூறிய அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "கர்ப்பிணிகள் காய்ச்சல் இருந்தால் மட்டுமே Tylenol எடுத்துக்கொள்ள வேண்டும். Tylenol பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் அபாயத்தை அதிகரிக்கும்".என தெரிவித்துள்ளார்.
மேலும், "எந்த ஆதாரமும் இல்லாமல், குணப்படுத்த முடியாத நோய்களுக்காக பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் எந்த காரணமும் இல்லை. 12 வயதிற்கு மேல் தடுப்பூசி போட்டுகொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.
WHO மறுப்பு
ஆனால், டிரம்ப்பின் வலி நிவாரணியை ஆட்டிசத்துடன் தொடர்புபடுத்தி விடுத்த எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு(WHO) உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.
கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் வலிநிவாரணிக்கும், ஆட்டிசத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்னாள் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன், "பாராசிட்டமால் ஆட்டிசத்துடன் தொடர்புடையது என்பதற்கான நிரூபிக்கப்பட்ட அறிவியல் ஆதாரங்களை இதுவரை நான் பார்க்கவில்லை.
பாராசிட்டமால் மருந்தின் செயல்திறனை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்த கருத்துக்கள் வினோதமாக உள்ளது. பாராசிட்டமால் பாதுகாப்பான மருந்து. அதுகுறித்து அச்சப்பட தேவையில்லை.
பாராசிட்டமால் உட்பட எந்த மருந்தையும் நீண்ட காலம் பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும். பாராசிட்டமால் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.
ஆனால் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் அதைப் பயன்படுத்துவதில், பாதிப்புகளை விட அதிக நன்மைகள் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |