மூன்று நிறுவனங்களின் இருமல் மருந்துகள் குறித்து எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்ட சிறுபிள்ளைகள் உயிரிழக்கக் காரணமாக அமைந்த இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்று இந்திய தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
பல சிறுபிள்ளைகளின் உயிரை பலிவாங்கிய இருமல் மருந்து
மத்தியப்பிரதேசத்தில், Coldrif என்னும் இருமல் மருந்தை உட்கொண்ட 20க்கும் மேற்பட்ட சிறுபிள்ளைகள் உயிரிழந்தார்கள்.
அந்த மருந்தை ஆய்வுக்குட்படுத்தியதில், அதில் அனுமதிக்கப்பட்டதற்கும் மிக அதிக அளவில் டை எத்திலீன் கிளைக்கால் (DEG) என்னும் ரசாயனம் கலந்துள்ளது தெரியவந்தது.
இந்த DEG என்பது, சாயமிடுதல் மற்றும் அச்சிடல் முதலான துறைகளில் பயன்படுத்தப்படும், நிறமோ மணமோ அற்ற, இனிப்புச் சுவை கொண்ட, நச்சுத்தன்மை கொண்ட ரசாயனமாகும்.
சிறுபிள்ளைகள் அதை உட்கொண்டால், அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு முதல் மரணம் வரை ஏற்படக்கூடும்.
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இந்நிலையில், Sresan Pharmaceuticals நிறுவனத்தின் தயாரிப்பான Coldrif இருமல் மருந்து மட்டுமின்றி, மேலும் இரண்டு நிறுவனங்களின் இருமல் மருந்துகள் குறித்தும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
Rednex Pharmaceuticals என்னும் நிறுவனத்தின் Respifresh TR என்னும் இருமல் மருந்தும் Shape Pharma என்னும் நிறுவனத்தின் ReLife என்னும் இருமல் மருந்தும் கூட பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும் தரமற்றவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு இருமல் மருந்துகளிலும் கூட, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் டை எத்திலீன் கிளைக்கால் (DEG) என்னும் ரசாயனம் கலந்துள்ளது தெரியவந்தது.
ஆகவே, அவற்றைத் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவற்றின் தயாரிப்பையும் இந்திய அரசு நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |