கோல்டன் பேட் விருதை கோலி வெல்வாரா? யார் யாருக்கு வாய்ப்புள்ளது?
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோல்டன் பேட் விருதை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி வரும் மார்ச் 9 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளது.
இந்நிலையில் அதிக ஓட்டங்கள் பெற்றவருக்காக வழங்கப்படும் கோல்டன் பேட் விருதை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோல்டன் பேட் விருது யாருக்கு?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், 227 ஓட்டங்கள் சேர்த்து முதல் இடத்தில் உள்ளார்.
226 ஓட்டங்களுடன் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 2வது இடத்திலும், 225 ஓட்டங்களுடன் இங்கிலாந்தின் ஜோ ரூட் 3வது இடத்திலும், 217 ஓட்டங்களுடன் விராட் கோலி 4வது இடத்திலும் உள்ளார்.
தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் 216 ஓட்டங்களுடன் 5வது இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் 195 ஓட்டங்களுடன் 6வது இடத்திலும் உள்ளனர்.
இதில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறிவிட்ட நிலையில், ரச்சின் ரவீந்திரா, விராட் கோலிக்கு இடையே சொற்ப அளவிலான ஓட்ட வேறுபாடுகளே உள்ளதால் இருவரும் கோல்டன் பேட் வெல்லும் வாய்ப்பில் முன்னிலையில் உள்ளனர்.
விராட் கோலிக்கு உள்ள வாய்ப்பு
டாம் லேதம்(191 ஓட்டங்கள்), கேன் வில்லியம்சன்(189 ஓட்டங்கள்), ஷுப்மன் கில்(157 ஓட்டங்கள்), வில் யங்(150 ஓட்டங்கள்) ஆகியோர் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
கடந்த 2013, 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய வீரர் ஷிகர் தவான் கோல்டன் பேட் விருதை வென்றுள்ளார். அதற்கு முன்னதாக 2000-ல் சவுரவ் கங்குலியும், 2002-ல் வீரேந்தர் சேவாக்கும் கோல்டன் பேட் விருதை வென்றனர்.
ஏற்கனவே 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் விராட் கோலி கோல்டன் பேட் விருதை வென்றுள்ளார். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கோல்டன் பேட் விருதை வென்றால், ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் கோல்டன் பேட் விருது பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |