ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்களை வாங்கி குவித்ததன் பின்னணி காரணம் என்ன? உண்மையை உடைத்தார் பில் கேட்ஸ்
அமெரிக்க தொழிலதிபரும், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவருமான பில் கேட்ஸ், சமீபகாலமாக தான் அமெரிக்காவில் ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்களை வாங்கி குவித்ததன் காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நில அறிக்கையின் படி, அமெரிக்காவின் 18 மாநிலங்களில் பில் கேட்ஸ்-க்கு 2,42,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறதாம்.
முன்னதாக, பருவநிலை மாற்றம் பிரச்சினையை கையாளும் நோக்கத்தில் பில் கேட்ஸ் ஆர்வத்துடன் விவசாய நிலங்களை வாங்கி குவித்து வருவதாக ஊடகங்கள் யூகித்தன.
இந்நிலையில், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் முயற்சியில் தான் விவசாய நிலங்களை வாங்கி வருவதாக பரவிய தகவல்களை பில் கேட்ஸ் மறுத்துள்ளார்.
தன்னுடைய முதலீட்டுக் குழு விவசாய நிலங்களை வாங்க முடிவெடுத்தது எனவும், இதற்கும் பருவநிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், இது முழுக்க முழுக்க நிதிநிலை தொடர்பானது என பில் கேட்ஸ் விளக்கமளித்துள்ளார்.
விவசாயத்துறை மிக முக்கியமானது, காடழிப்பு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்க்க அது உதவும் என கூறினார்.
மேலும், இயற்கை எரிபொருள்கள் எவ்வளவு மலிவானது என தெரியவில்லை, ஆனால் அவை மலிவாக இருந்தால் விமானம் மற்றும் வாகன மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும் என பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
