உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? வைகோ விளக்கம்
திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் திகதி நடைபெற இருப்பதால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு விவகாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மதிமுக தரப்பில் 12 தொகுதிகள் கேட்கப்படுவதாகவும் அதனால் தான் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் இன்று திமுக - மதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த வைகோ, ஒரு கட்சி 12 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட்டால் தான் 5 சதவீத அடிப்படையில் ஒரே சின்னத்தில் எல்லா இடங்களிலும் போட்டியிடலாம்.
12 தொகுதிகளுக்கு குறைவாக போட்டியிட்டால் ஒவ்வொரு தொகுதிக்கும் வேறு வேறு சின்னங்களில் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
இந்த நெருக்கடியான சூழலை தவிர்ப்பதற்கும், 12 நாட்கள் மட்டுமே பிரசாரத்திற்கு இருப்பதனாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம் என்று கூறினார்.