உங்கள் குடும்பங்கள் ஏன் பாகிஸ்தான் செல்லவில்லை! மாணவர்களிடம் ஆசிரியை சர்ச்சை கேள்வி
நாடு பிரிக்கப்பட்டபோது உங்கள் குடும்பங்கள் ஏன் பாகிஸ்தானுக்குப் போகவில்லை என்று இஸ்லாமிய மாணவர்களிடம் ஆசிரியை ஒருவர் கேள்வி கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியை சர்ச்சை கேள்வி
சமீப காலமாகவே பள்ளிகளில் சாதி மற்றும் மத ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. அதற்கு சமீபத்தில் நடந்த விடயங்களே உதாரணம்.
அந்தவகையில், டெல்லி காந்தி நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவர் 9 ஆம் வகுப்பு மாணவர்களிடம் மத ரீதியான கருத்துக்களை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பள்ளியில் உள்ள ஆசிரியை ஒருவர், "நாடு பிரிக்கப்பட்டபோது உங்கள் குடும்பங்கள் ஏன் பாகிஸ்தானுக்குப் போகவில்லை. நீங்கள், ஏன் இந்தியாவில் தங்கியுள்ளீர்கள். இந்தியாவின் சுதந்திரத்தில் உங்களது பங்களிப்பு இல்லை" எனக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர், மத கருத்துக்களை கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
பொலிசில் புகார்
இந்த விவகாரம் தொடர்பாக 4 மாணவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இதில் சம்மந்தப்பட்ட ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில்,"இது போன்ற கருத்துக்களை கூறும் ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மாணவர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும். அப்போது, தான் இது போன்று பேசும் மற்ற ஆசிரியர்களுக்கும் தைரியம் ஏற்படாமல் இருக்கும்" என்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |