தாலிபான்கள் வந்த பின் நாட்டை விட்டு தப்பி ஓடியது ஏன்? விளக்கம் கொடுத்த முன்னாள் அதிபர் அஷ்ரப்கனி
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தவுடன், நாட்டை விட்டு ஓடிய முன்னாள் அதிபர் அது குறித்து முதன் முறையாக தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநக காபூலை கடந்த ஆண்டு(2021) ஆகஸ்ட் மாதம் 15-ஆம் திகதி தாலிபான்கள் கைப்பற்றியதால், ஒட்டு மொத்த நாடும் அவர்கள் வசம் சென்றது.
தாலிபான்கள் காபூலுக்குள் நுழைந்த சில மணி நேரங்களிலே, அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கனி, விமானத்தில் மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிக் கொண்டு, தன்னுடைய மனைவியுடன் நாட்டை விட்டு தப்பி ஓடி, ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளதாக கூறப்பட்டது.
இதனால் அவர் மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது ஏன் என்பது குறித்து துபாயில் இருக்கும் அவர் முதன் முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
அதில், நான் அன்றைய தினம் கண் விழித்து பார்த்த போது, அது தான் என்னுடைய கடைசி நாளாக இருக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை. தாலிபான்கள் நெருங்கிவிட்டதால் காபூலில் இருந்து வெளியேற பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
நாங்கள் எங்கு செல்வோம் என்று எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து புறப்பட்டபோதுதான், நாங்கள் ஆப்கானை விட்டு வெளியேறுகிறோம் என்பது தெளிவாகத் தெரிந்தது.
இது உண்மையில் திடீரென நடந்தது.
எதுவும் திட்டமிட்டு நடக்கவில்லை, நான் பணத்தை அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் திட்டவட்டமாக கூறிக் கொள்கிறேன், நான் நாட்டிலிருந்து எந்தப் பணத்தையும் எடுக்கவில்லை. என்னுடைய வாழ்க்கை முறை அனைவருக்கும் தெரியும். பணத்தை வைத்து நான் என்ன செய்வேன் என்று கூறியுள்ளார்.