உளவு அதிகாரிகளுக்கு இஸ்லாமிய படிப்பை கட்டாயமாக்கிய இஸ்ரேல் - ஏன் தெரியமா?
இஸ்ரேல் அதன் உளவு பிரிவு அதிகாரிகளுக்கு இஸ்லாமிய மற்றும் அரபு மொழி படிப்பை கட்டாயமாக்கியுள்ளது.
இஸ்லாமிய படிப்பு கட்டாயம்
இஸ்ரேல், அதன் உளவுப்பிரிவில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய படிப்புகளை கட்டாயமாக்கியுள்ளது.
AMAN தலைவர் மேஜர் ஜெனரல் ஷ்லோமி பைண்டர், இந்த மாற்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள், இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு இயக்குநரகத்தின்(AMAN) பணியாளர்களில் 100 சதவீதம் பேர் இஸ்லாமிய ஆய்வுகளில் பயிற்சி பெறுவார்கள். அவர்களில் 50 சதவீதம் பேர், அரபு மொழிப் பயிற்சி பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மற்றும் சைபர் பணிகளில் ஈடுபடும் வீரர்கள், அரபு மற்றும் இஸ்லாமிய ஆய்வுகளில் பயிற்சி பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
உளவுத்துறை பணியாளர்கள் ஹவுதி தகவல்தொடர்புகளைப் புரிந்துகொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதால், ஹவுதி மற்றும் ஈராக் பேச்சுவழக்குகளில் சிறப்புப் பயிற்சி அளிப்பதிலும் இந்த திட்டம் கவனம் செலுத்த உள்ளது.
மேலும், அரபு மற்றும் இஸ்லாமிய கல்விக்கு தனியாக ஒரு புதிய துறை உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
அக்டோபர் 7, 2023 அன்று நடைபெற்ற உளவுத்துறை தோல்வியின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய கடும் தாக்குதலில், 1,180 இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
அப்போது தொடங்கிய ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர், காசாவில் தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த போரில், இதுவரை 60,000 பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பட்ஜெட் கட்டுப்பாடுகள் காரணமாக, இஸ்ரேலிய நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் அரபு மற்றும் மத்திய கிழக்கு படிப்புகளை ஊக்குவிப்பதற்காக TELEM துறை மூடப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது மீண்டும் அதை திறக்க IDF திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |