திடீரென்று எம்ஜிஆர் மீது ஏன் இவ்வளவு அன்பு.., பவன் கல்யாணை விமர்சித்த பிரகாஷ் ராஜ்
ஆந்திர மாநில துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண், அதிமுக கட்சியையும் எம்ஜிஆரையும் குறித்து கருத்து தெரிவித்ததற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் விமர்சனம்
அதிமுக-வின் 53-வது ஆண்டு துவக்க விழா வரும் ஒக்டோபர் 17-ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், துவக்க விழா பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "அதிமுக மற்றும் அதன் 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் ஆதரவாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பாரம்பரியமும் புரட்சித்தலைவி அம்மாவின் தொலைநோக்கு பார்வையும் தலைமுறை தலைமுறையாக லட்சக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
'எல்லோருக்கும் எல்லாம்' என்ற ஆட்சி மாதிரி நம் அனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது.
திருக்குறள் சொல்வது போல், 'இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்திடுக்கண் வருதல் இனிது' (குறள் 620) சவால்களை நேருக்கு நேர் சந்தித்து, தொடர்ந்து வலுவாக வெளிவரும் அதிமுகவின் உணர்வைப் பிரதிபலிக்கிறது.
பழனிசாமி தலைமையில், இந்த மாபெரும் இயக்கம் தொடர்ந்து செழித்து, அனைவருக்கும் செழிப்புடன் இருக்கட்டும். எம்.ஜி.ஆரின் புரட்சிகர இலட்சியத்தின் ஊடாக நாம் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்லும் அதிமுக குடும்பத்தாருக்கு எனது நல்வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.
இவரின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "`திடீரென்று எம்.ஜி.ஆர் மீது ஏன் இவ்வளவு அன்பு, மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததா? சும்மா கேட்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |