கமேனியின் உடலை மஷ்ஹத்தில் அடக்கம் செய்வது ஏன்?
ஈரானின் மறைந்த உச்சத்தலைவர் அலி கமேனியின் உடலை மஷ்ஹத்தில் அடக்கம் செய்வது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.
கமேனியின் உடல் அடக்கம்
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி, இஸ்ரேலின் வான்படை நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவராக இருந்த அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இஸ்ரேல் இடையே போர் தொடங்கியதால் கமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் உடல் அடக்கம் ஒத்திவைக்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்னால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஜூன் 9 ஆம் திகதி கமேனியின் உடலை அடக்கம் செய்ய உள்ளதாக ஈரான் அறிவித்தது.
இந்த 4 மாத காலத்திற்கு கமேனியின் உடலை அதிநவீன குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து ஈரான் பாதுகாத்தது.
ஈரானில் உள்ள மஷ்ஹத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லா மத வளாகத்தில் அவரது உடல் 2 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வராத நிலையில், அலி கமேனியின் மற்ற 3மகன்களான முஸ்தபா, மீசம் மற்றும் மசூத் ஆகியோர்இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கமேனியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, அங்கிருந்து தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் கலந்து கொண்டனர்.

ஈராக்கில் உள்ள தெஹ்ரான், கோம் , நஜாஃப் மற்றும் கர்பலா உள்ளிட்ட முக்கிய மத மையங்கள் வழியாகப் பயணித்து, மஷ்ஹத்தை அடைந்துள்ளது.
ஏன் மஷ்ஹத்தில் அடக்கம்?
மஷ்ஹத் கமெனியின் பிறந்த இடமாகும். 1939 ஆம் ஆண்டில் அங்கு பிறந்த அவர், தனது குழந்தைப் பருவத்தை அங்கு கழித்ததோடு, ஆரம்பகால மதக் கல்வியையும் அந்த நகரத்தில் பெற்றார்.

மேலும், தான் பிறந்த ஊரிலே தன்னை அடக்கம் செய்ய வேண்டுமென முன்னதாகவே கமெனி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மஷ்ஹத் நகரில், ஷியா முஸ்லிம்களுக்கு ஈரானின் மிகவும் புனிதமான தலமான இமாம் ரெஸா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில், ஷியா இஸ்லாத்தின் எட்டாவது இமாமும், ஈரானுக்குள் அடக்கம் செய்யப்பட்ட ஒரே ஷியா இமாமுமான இமாம் ரெஸாவின் கல்லறை உள்ளது.

இங்கு கமெனியை அடக்கம் செய்வது மிகுந்த மத முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதுடன், கமேனியின் மரபுப் பெருமையை ஷியா இஸ்லாமின் புனிதத் தலங்களில் ஒன்றுடன் நெருக்கமாக இணைக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |