டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் தடுப்பூசி மறுப்பதன் காரணம் இதுதான்...
உலகின் முதன்மை டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் தடுப்பூசி போடாததால், அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறார்.
செர்பிய நாட்டவரான நோவக் ஜோகோவிச் தடுப்பூசி மறுப்பதன் காரணம் தொடர்பில் தகவல் வெளியாகிய்யுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் மரணமடைந்துள்ள நிலையிலும் உலகம் முழுவதும் தடுப்பூசி மறுப்பாளர்களும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்றனர்.
உடல் நிலை சார்ந்த தனிப்பட்ட காரணங்களுக்காக பலர் தடுப்பூசி மறுத்து வருகின்றனர். ஆனால் குறிப்பிட்ட சிலர் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட காரணங்களால் தடுப்பூசியை மறுத்து வருகின்றனர்.
இருப்பினும் பொதுமக்களின் நலன் கருதி தடுப்பூசி போட்டுக்கொள்வதையே பல நாட்டு அரசுகள் ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில், செர்பிய நாட்டவரும் உலகின் முதன்மை டென்னிஸ் நட்சத்திரமுமான நோவக் ஜோகோவிச் தடுப்பூசி போடாத காரணத்தால் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
இருப்பினும், தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள ஜோகோவிச், அவுஸ்திரேலிய நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை திங்களன்று முன்னெடுக்கப்படவிருக்கிறது. அதுவரையில் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் ஹொட்டல் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு தொடர்பாக உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜோகோவிச், கடந்த 2020 ஏப்ரல் மாதம் தடுப்பூசி தொடர்பான தமது நிலைப்பாடு தொடர்பில் முதன்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
பயண காரணங்களை குறிப்பிட்டு எவர் ஒருவரும் தடுப்பூசி தொடர்பில் தம்மை கட்டாயப்படுத்துவதை தாம் விரும்பவில்லை என்றே அவர் அப்போது தெரிவித்திருந்தார். மட்டுமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளாதது தொடர்பில் ஊடகங்கள் பெரிதுபடுத்துவது தேவையற்ற செயல் என காட்டமாக தெரிவித்திருந்தார்.
செர்பிய மக்களை பொறுத்தமட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வமில்லாதவர்கள் என்றே கூறப்படுகிறது.
மொத்த மக்கள் தொகையில் வெறும் 46.5% மக்களே முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
அரசு மற்றும் மருந்துத் துறை மீது நிலவும் அவநம்பிக்கையே இதற்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.