நாம் தமிழர் கட்சி கடைசி வரை தேர்தல் அறிக்கையை வெளியிடாதது ஏன்... என்ன காரணம்? மூத்த நிர்வாகி கூறிய தகவல்
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு கடைசி வரை வெளியிடப்படாததற்கு என்ன காரணம் என்பதை அக்கட்சியின் மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.
தேர்தலில் கட்சி, வேட்பாளர்களுக்கு நிகராக மக்களிடையே முக்கியத்துவம் பெற்ற ஒன்று தேர்தல் அறிக்கை. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உட்பட பிற கட்சிகளும் 2021 தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.
அந்த வரிசையில் இலவச கல்வி, மருத்துவம், தூய குடிநீர் என பரப்புரை மேற்கொண்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
பின்னர் அந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை ஏப்ரல் 6ம் திகதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடைசி வரை தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி தேர்தலுக்கு தேர்தல் வெளியிடும் தங்களது ஆட்சி செயற்பாட்டு வரைவை வெளியிடவில்லை.
போதிய நிதி வசதி இல்லாததால் இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு வெளியிடப்படவில்லை என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
