உலகக் கோப்பை வெற்றி! இந்திய வீராங்கனை பிரத்திகா ராவலுக்கு பதக்கம் வழங்கப்படாதது ஏன்?
மகளிர் உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது முதல் உலகக் கோப்பை கனவை அடைந்துள்ளது.
உலகக் கோப்பையுடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மைதானத்தை சுற்றி வந்து இந்திய ரசிகர்களுக்கு வெற்றியை சமர்பித்தனர்.

இந்த கொண்டாட்டமான தருணத்தில் இந்திய தேசிய கொடியை போர்த்திக் கொண்டு கண்ணீருடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்த 25 வயது பெண்ணான பிரத்திகா ராவல், இந்திய அணியின் இந்த மகத்தான வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றியவர்.
யார் இந்த பிரத்திகா ராவல்?
பிரத்திகா ராவல் 2000ம் ஆண்டு செப்டம்பர் 1ம் திகதி டெல்லியில் பிறந்தவர், கல்வி மற்றும் விளையாட்டு இரண்டிலும் சிறந்து விளங்கிய பிரத்திகா ராவல் தன்னுடைய 12ம் வகுப்பு பொது தேர்வில் 92.5% மதிப்பெண் பெற்று அசத்தியவர்.
டெல்லி ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரியில் உளவியல் இளங்கலைப் பட்டம் பெற்ற பிரித்திகா ராவல், கல்லூரி காலத்தில் சிறந்த தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.

2019 ஆண்டு பள்ளி தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றும் அசத்தியுள்ளார்.
இந்திய அணியில் பிரத்திகா ராவல்
கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட பிரத்திகா ராவல், ஒருநாள் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதிவேகமாக 1000 ஓட்டங்கள் குவித்த வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.
உலகக் கோப்பை போட்டிக்கான மகளிர் அணி குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்திகா ராவல், லீக் போட்டிகளில் களமிறங்கி எதிரணி வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்தார்.
6 இன்னிங்ஸ்களில் 51.33 சராசரியுடன் 308 ஓட்டங்கள் குவித்து மகளிர் கிரிக்கெட் கோப்பை தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரின் பாதியில் அணியில் இருந்து விலக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக களமிறங்கிய ஷஃபாலி வர்மா இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகி விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

பிரத்திகா ராவலுக்கு பதக்கம் வழங்கப்படாதது ஏன்?
மகளிர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று லீக் ஆட்டங்களில் பங்கேற்று இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தும் பரிசளிப்பு விழாவின் போது பிரத்திகா ராவலுக்கு வெற்றி பதக்கம் வழங்கப்பட வில்லை.
இதற்கு முக்கிய காரணம், இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அதிகாரப்பூர்வமான 15 பேர் கொண்ட வீரர்கள் குழு மட்டுமே வெற்றி பதக்கம் பெற உரிமை உண்டு என்ற ஐசிசி-யின் முக்கிய விதியாகும்.
காயம் காரணமாக இறுதிப் போட்டிக்கான அணியில் அவர் பெயர் இடம்பெறவில்லை என்பதால், அவருக்கு வெற்றி பதக்கம் கிடைக்கவில்லை, ஆனால் அவருக்கு மாற்றாக களமிறங்கிய ஷஃபாலிக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |