ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன்? சீமான் கொடுத்த தெளிவான விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
அதன் படி நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை, சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் திகதி அறிவிப்புக்கு முன்பு, சீமான், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார்.
ஸ்டாலின் கொளத்தூரில் போட்டிடுகிறார், நீங்கள் திருவொற்றியூர் என்று அறிவித்துள்ளீர்களே என்று கேட்ட போது, சீமான், கொளத்தூரில் தான் போட்டியிடலாம் என்று இருந்தேன்.
ஆனால் மக்கள் நலன்தான் முக்கியம். ஒருவரை வீழ்த்துவது முக்கியம் இல்லை. ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்கிறேன் என்பதே முக்கியம். இதனால் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடாமல் திருவொற்றியூர் தொகுதியை தெரிவு செய்து இருக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.


