கணவனை முதலை கொன்றுவிட்டதாக கூறிய மனைவி: திகில் திரைப்படத்தை மிஞ்சிய செய்தி
அமெரிக்காவில், பள்ளிப்பருவம் முதல் நண்பர்களாக இருந்தார்கள் நான்குபேர். அவர்கள் இரண்டு தம்பதியர்களானபின் நடந்த விடயங்களைக் கேட்டால், திகில் திரைப்படம் பார்ப்பது போல் இருக்கிறது.
நான்கு நண்பர்கள்
ப்ளோரிடாவிலுள்ள Tallahassee என்னுமிடத்தைச் சேர்ந்தவர்கள் மைக், டெனிஸ் வில்லியம்ஸ், பிரையன் மற்றும் கேத்தி வின்செஸ்டர் ஆகியோர். பள்ளிப்பருவம் முதல் நண்பர்களாக இருந்த நிலையில், பட்டப்படிப்பு முடித்து மைக், டெனிசையும், பிரையன், கேத்தியையும் திருமணம் செய்துகொண்டார்கள்.
நண்பருக்காக பிரையன் செய்த செயல்
மைக் வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் செல்லக்கூடியவர். அவை இரண்டுமே ஆபத்தான விடயங்கள் என்பதால் அவரது நண்பர் பிரையன், மைக் 1.75 மில்லியன் பவுண்டுகள் காப்பீடு எடுக்க அவருக்கு உதவினார். பிரையன் காப்பீட்டுத் துறையில்தான் பணியாற்றிவந்தார்.
2000ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 16ஆம் திகதி, மைக், டெனிஸ் தம்பதியரின் ஆறாவது ஆண்டு திருமண நாள். காலையிலேயே வேட்டைக்குப் புறப்பட்ட மைக், மதியத்திற்குள் திரும்பிவிடுவதாகக் கூறிச் சென்றார். ஆனால், அவர் வீடு திரும்பவேயில்லை.
முதலை கொன்றுவிட்டதாக வெளியான தகவல்
மைக்கை காணாததால் டெனிஸ் பொலிசில் புகாரளிக்க, பொலிசாரும் உள்ளூர் மக்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். ஆனால், மைக்கின் உடல் கிடைக்கவேயில்லை. அவரை முதலை கொன்று தின்றிருக்கலாம் என கருதப்பட்டது.
மைக் டெனிஸ் தம்பதியருக்கு ஒரு மகள் இருந்தாள். மைக்கைத் தேடும் பணி முடிவதற்குள்ளாகவே, காப்பீட்டுத்தொகைக்கு விண்ணப்பித்தார் டெனிஸ். ஆனால், மைக் இறந்தது உறுதி செய்யப்படாததால் அவருக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
மைக் காணாமல் போய் ஆறு மாதங்கள் ஆன நிலையில், உள்ளூர் மீனவர் ஒருவருக்கு, மைக் வேட்டைக்குச் செல்லும்போது அணிந்திருந்த ஜாக்கெட், அவரது வேட்டை உரிமம் மற்றும் அவரது டார்ச் ஆகியவை கிடைத்தன.
அதைத் தொடர்ந்து, அவர் இறந்துவிட்டதாக முடிவு செய்யப்பட்டு டெனிஸுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
சந்தேகத்தை உருவாக்கிய விடயங்கள்
வேட்டையாடுதல் மற்றும் விலங்குகள் குறித்து நன்கு அறிந்துவைத்திருந்த மைக்கின் தாயாகிய ஷெரிலுக்கு மட்டும் தன் மகன் காணாமல் போனது குறித்து ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.
இதற்கிடையில், மைக், டெனிஸ் தம்பதியரின் நண்பர்களான பிரையனும் கேத்தியும் விவாகரத்து செய்தார்கள். சீக்கிரமாகவே பிரையன் இறந்துபோன தன் நண்பர் மைக்கின் மனைவியாகிய டெனிஸைக் காதலிக்கத் துவங்கினார்.
2005இல் இருவரும் திருமணமும் செய்துகொள்ள, ஏற்கனவே டெனிஸ் சீக்கிரமாக காப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பித்த விடயம் சந்தேகத்தை உருவாக்கியிருந்ததால், தம்பதியர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.
விசாரணையின்போது, தான் மைக் இறக்கும்போது வேறெங்கோ இருண்டதாக பிரையன் கூற, அது பொய், அவர் அருகில்தான் இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.
இன்னொரு அதிர்ச்சிக்குரிய விடயமும் வெளிவந்தது. பிரையனின் மனைவியை விசாரிக்கும்போது, தன் கணவருக்கும், மைக்கின் மனைவியாகிய டெனிஸுக்கும் பல ஆண்டுகளாக தவறான உறவு இருந்ததாக டெரிவித்தார் கேத்தி. ஆனால், அதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.
Image: WCTV
வெளிவந்த உண்மை
இப்படிப்பட்ட சூழலில், 2012ஆம் ஆண்டு, டெனிஸும் பிரையனும் விவாகரத்து செய்து பிரிந்தார்கள். ஆனால், மீண்டும் டெனிஸுடன் இணைய விரும்பினார் பிரையன். அதற்குள் டெனிஸுக்கு காதல் காணாமல் போயிருந்தது. ஒரு நாள் டெனிஸுடைய காரில் மறைந்திருந்த பிரையன், தன்னை ஏற்றுக்கொள்ளுமாறும், இல்லையென்றால் டெனிஸைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வதாகவும் மிரட்ட, பொலிசுக்குச் சென்றார் டெனிஸ்.
பிரையனை பொலிசார் விசாரிக்கும்போது ஒரு பெரிய உண்மை வெளியே வந்தது. ஆம், டெனிஸும் அவரும் சேர்ந்து திட்டமிட்டு, மைக் வேட்டையாடச் சென்ற அன்றே பிரையன் சுட்டுக் கொன்றிருந்தார்.
மைக் உடல் கிடைக்க, உண்மை நிரூபணமாக, தான் தப்பி விட்டதாக எண்ணிக்கொண்டிருந்த டெனிஸை மாட்டிவிட்டார் பிரையன்.
டெனிஸுக்கு பரோலில் வர முடியாத வகையில் ஆயுள் தண்டனையும், பிரையனுக்கு 2033இல் பரோல் கிடைக்கும் வகையில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மைக்கைக் கொன்றுவிட்டு இணைந்து வாழ திட்டமிட்ட டெனிஸும் பிரையனும் தனித்தனியே சிறையில் நாட்களை செலவிட்டுவருகிறார்கள்.