கணவரை கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்த மனைவி: விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி பின்னணி
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் பெண் ஒருவர் கணவரை கொன்று சடலத்தை வீட்டு தோட்டத்திலேயே புதைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆந்திராவின் ஐதராபாத் பகுதியில் நடந்த இச்சம்பவம் கடந்த புதன் அன்று வெளிச்சத்துக்கு வந்தது. பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கொல்லப்பட்ட நபரின் பெயர் ககன் அகர்வால் என தெரிய வந்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்னர் 38 வயதான ககன் அகர்வால் தமது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நவ்ஷீன் பேகம் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 6ம் திகதி ககன் அகர்வால் திடீரென்று மாயமானதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரது சகோதரர் பொலிசாரை நாடி, இது தொடர்பில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, நவ்ஷீன் பேகமும் அகர்வாலுடன் வசித்து வந்த வீட்டை பூட்டிவிட்டு, தமது தாயாரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த பொலிசார், சந்தேகத்தின் பேரில் நவ்ஷீன் பேகத்திடம் விசாரித்துள்ளனர்.
முதலில் அடம்பிடித்த அவர், பின்னர் தமது கணவரை 6ம் திகதி கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். நண்பரான சுனில் என்பவரின் உதவியுடன் ககன் அகர்வாலை கொன்றுவிட்டு, வீட்டு தோட்டத்திலேயே சடலத்தை புதைத்துள்ளதையும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
தமது மகளை அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாலையே, கணவரை கொன்றதாக நவ்ஷீன் பேகம் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
நவ்ஷீன் பேகம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உதவியதாக கூறப்படும் சுனில் தலைமறைவாகியுள்ளார்.
தற்போது ககன் அகர்வாலின் சடலத்தை மீட்டுள்ள பொலிசார், உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.