மோன்தா புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா? பிரதீப் ஜான் கொடுத்த விளக்கம்
மோன்தா புயலால் சென்னைக்கு கனமழை ஏற்படுவது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.
பாதிப்பு ஏற்படுமா?
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று அதிகாலை 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மோன்தா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புயலானது நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும்.
அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இந்நிலையில், மோன்தா புயல் குறித்து பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோன்தா புயல் சென்னைக்கும் மிகவும் குளிரான வானிலையைக் கொண்டுவருமே தவிர, புயலால் சென்னையில் மிக கனமழை பெய்யாது.
தென் சென்னையை விட வட சென்னையில் 50-70 மிமீ வரை அதிக மழை பெய்யும். தென் சென்னையில் 10-50 மிமீ மழை பெய்யும்.

ஆந்திராவுக்கு அருகில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் புலிகாட் போன்ற பகுதிகளுக்கு மட்டுமே கனமழை பெய்யும். வட சென்னையில் மட்டும் இந்த கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
நாளை காலை முதல் லேசான தீவிரத்துடனும், அவ்வப்போது கடுமையான வெடிப்புகளுடனும் மழை பெய்யும். செவ்வாய்க்கிழமை காலைக்குள் மழை நின்றுவிடும்" என்று கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |