சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடிவாரண்ட்: புடின் கைது செய்யப்படுவாரா?
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள விடயம் உலகையே பரபரப்பாக்கியுள்ளது. ஆனால், புடின் கைது செய்யப்படுவாரா?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடிவாரண்ட்
புடின் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடுகடத்தியதாகவும், உக்ரைனிலிருந்து ரஷ்யாவுக்கு மக்களை சட்டவிரோதமாக இடமாற்றம் செய்ததாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், புடினைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
புடின் கைது செய்யப்படுவாரா?
ஆனால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் எந்த முடிவும் ரஷ்யாவில் செல்லுபடியாகாது என கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov தெரிவித்துள்ளார்.
புடினுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது மூர்க்கத்தனமான நடவடிக்கை என்று கூறியுள்ள ரஷ்யா, அதே நேரத்தில் ரஷ்யாவைப் பொருத்தவரை அது அர்த்தமற்றது என்று கூறியுள்ளது.
இன்னொரு முக்கிய விடயம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கென தனியாக பொலிசார் கிடையாது. ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வாரண்டை செயல்படுத்தவேண்டுமானால், அதன் உறுப்பு நாடுகளின் பொலிசாரால்தான் அதைச் செய்யமுடியும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டம் என்னும் ஒப்பந்தத்தின் கீழ் 123 நாடுகள் உள்ளன. அந்த நாடுகளில் ஒன்றில் புடின் கால் வைப்பரானால், அந்த நாடு புடினைக் கைது செய்து, நெதர்லாந்திலுள்ள The Hague நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கலாம்.
ரஷ்யா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டம் ஒப்பந்தத்தின் கீழ் இல்லை. ஆகவே, அதன் பொலிசார் புடினைக் கைது செய்யவேண்டும் என எதிர்பார்க்கமுடியாது. புடின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் ரஷ்யா அவரைக் கைது செய்யும் என எதிர்பார்க்கவும் முடியாது.
நிபுணர்கள் கருத்து
புடின் கைது செய்யப்படுவாரா என நிபுணர்கள் சிலரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. சட்ட விமர்சகரான Joshua Rozenberg என்பவர் கூறும்போது, இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள விடயம் யாரும் எதிர்பாராத வியப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு நடவடிக்கை, ஆனால், அவர் கைது செய்யப்பட்டால் மட்டுமே அவரை விசாரணைக்குட்படுத்த முடியும். அவர் ரஷ்யாவை ஆளும்வரை அது சாத்தியமில்லை என்றார். ஆக இப்போதைக்கு பெரிதாக ஒன்றும் நடக்கப்போவதில்லை என்கிறார் அவர்.
2018 முதல் 2021வரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவராக இருந்த Dr Chile Eboe-Osuji கூறும்போது, இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட விடயம் உண்மையாகவே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றும், யாரும் சர்வதேச சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்பதை அது காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
புடின் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது நிச்சயம் என தான் கருதுவதாகத் தெரிவித்துள்ள அவர், புடின் இது கதையல்ல, நிஜம் என்பதை கற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது என்றும் கூறியுள்ளார்.
ஆக, சிலர் புடின் கைது செய்யப்படலாம் என்றும், வேறு சிலரோ இப்போதைக்கு அது சாத்தியமல்ல என்றும் கூறியிருப்பதால், என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.