சசிகலா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? பிரேம்சிங் தமாங் வழக்கை முன்னுதாரணம் காட்ட முடிவு என தகவல்
சசிகலா சிறை தண்டனை காரணமாக, 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்படும் நிலையில், அதை சட்டரீதியாக உடைப்பதற்கு தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.
சிறை தண்டனை பெற்றதால், இவர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உள்ளது.
ஆனால், இதே போன்று சிக்கிம் மாநிலத்தில் அமைச்சராக இருந்த பிரேம்சிங் தமாங், ஊழல் வழக்கு தொடர்பாக சிறையில் இருந்தார்.
2018-ஆம் ஆண்டு சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த அவர், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்பட்டது.
இருப்பினும் அவர் தேர்தல் ஆணையத்தில், தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார்.
இதனைப் பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் அவருக்கு சலுகை வழங்கியது. இதனால் அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சரானார்.
இதுபோன்ற சலுகையை சசிகலாவுக்கும் பெற்றுவிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர்.
இதற்காக வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்கள் ஆகியோருடன் சசிகலா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையில் சில முடிவுகளை எடுத்து தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் மனு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

