மத்திய அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை? தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்?
இந்திய முழுவதும் பாஜகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவட்ட தலைவர்கள் தேர்தல் முடிவுற்று மாநில தலைவர்கள் தேர்தல் தொடங்கியுள்ளது.
அதைத் தொடர்ந்து தேசிய தலைவர் தேர்தல் நடத்தப்படும். இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி?
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.
இந்த கூட்டணிக்குள் அதிமுகவை மீண்டும் கொண்டு வர, பாஜக டெல்லி தலைமை காய் நகர்த்தி வருகிறது.
2021 தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்தததால், அதிமுக கூட்டணியை முறித்து கொண்டது.
சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள், டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு மறுநாள் பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார்.
மத்திய அமைச்சராக அண்ணாமலை?
இந்நிலையில் பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பால திறப்பு விழாவிற்காக வரும் ஏப்ரல் 6 ஆம் தமிழகம் வர உள்ள நிலையில், அதன் பின்னர் பாஜக மாநில தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி அண்ணாமலை மாற்றப்படும் பட்சத்தில், புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில், தென் இந்திய பாஜகவின் பிரபல முகமாக அண்ணாமலை இருப்பதால், அவரை ராஜ்ய சபா மூலம் எம்.பி யாக தேர்வு செய்து, மத்திய அமைச்சராக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |