பிரான்சில் ஆட்சியை கைப்பற்றவிருக்கும் தீவிர வலதுசாரிகள்: அச்சத்தில் மூன்று பிரிவினர்
பிரான்சில் தீவிர வலதுசாரிகளான National Rally கட்சி முதல் சுற்று வாக்கெடுப்பில் ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில், முக்கியமாக மூன்று பிரிவினர் அச்சம் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர்
பிரான்சில் முதற்கட்ட வாக்குப்பதிவில் National Rally கட்சி 34 சதவிகித வாக்குகளை மொத்தமாக கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 7ம் திகதி நடக்கும் இரண்டாவது சுற்றிலும் National Rally கட்சி ஆதிக்கம் செலுத்தும் என்றால், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிரான்சில் தீவிர வலதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்படும்.
இந்த நிலையில், தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம் பிரான்சில் தற்போது மூன்று பிரிவினருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது என்றே பரவலாக கூறப்படுகிறது. பொதுவாக National Rally கட்சி இஸ்லாமியர்கள், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் மற்றும் புலம்பெயர் மக்களுக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள்.
அத்துடன் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் எதிரானவர்கள். National Rally கட்சி தற்போது களமிறக்கியுள்ள வேட்பாளர்களில் 45 பேர்கள் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் இனவாத, யூத எதிர்ப்பு அல்லது தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வருபவர்கள் என்றே ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மட்டுமின்றி National Rally கட்சியின் தலைவரும், தேர்தல் முடிவைப் பொறுத்து நாட்டின் பிரதமராக வாய்ப்புள்ளவருமான Jordan Bardella குறிப்பிட்ட மக்களை இலக்கு வைத்து அடிக்கடி கூறும் சொற்றொடர் என்பது வெளிநாட்டவர்களுக்குப் பிறந்த பிரான்ஸ் நாட்டவர்கள் என்பது தான்.
மேலும், குடியிருப்பு வசதிகள், அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் பிரான்ஸ் மக்களுக்கு மட்டுமே, வெளிநாட்டவர்களுக்கு அல்ல என்பதையும் Jordan Bardella அடிக்கடி தெளிவுப்படுத்தி வந்துள்ளார்.
இமாம்களை நாடு கடத்த வேண்டும்
2027ல் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பொதுவெளியில் பெண்கள் தலையை மூடிக்கொள்ளும் வழக்கத்தை தடை செய்ய தங்கள் கட்சி கோரும் என்றும் Jordan Bardella அறிவித்துள்ளார்.
அத்துடன் மசூதிகளை மூடிவிட்டு மத அடிப்படைவாதிகளாகக் கருதப்படும் இமாம்களை நாடு கடத்த வேண்டும் என்றும் Jordan Bardella தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தேர்தலை அறிவித்த சில மணி நேரங்களில் 19 வயதேயான இளைஞரை நால்வர் குழு ஒன்று மிருகத்தனமாக தாக்கியுள்ளதுடன், தன்பாலின எதிர்ப்பு கருத்துகளையும் கூறியுள்ளனர்.
அந்த நால்வரும் கைது செய்யப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் National Rally கட்சி ஆதரவாளர்கள் என பொலிசாரிடம் கூறியுள்ளனர்.
தீவிர வலதுசாரிகள் ஆட்சிக்கு வருவார்கள் என்றால் நாளும் செத்துப்பிழைக்கும் நிலை ஏற்படும் என்று பொலிஸ் காவலில் கொல்லப்பட்ட தமது சகோதரனுக்கு நீதி கேட்டு போராடி வரும் பெண் ஒருவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |