வீணான தஸ்மின் பிரிட்ஸ் சதம்: ஸ்நேஹ் ராணா 5 விக்கெட்..தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி
கொழும்பில் நடந்த மகளிர் முத்தரப்பு போட்டியில், இந்திய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
பிரதிகா ராவல் 78
இலங்கையில் நடந்து வரும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 276 ஓட்டங்கள் குவித்தது. பிரதிகா ராவல் 78 ஓட்டங்களும், ஹர்மன்பிரீத் மற்றும் ஜெமிமா தலா 41 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் லௌரா வோல்வார்ட், தஸ்மின் பிரிட்ஸ் கூட்டணி இந்திய பந்துவீச்சு நெருக்கடி கொடுத்தது.
அணித்தலைவர் லௌரா வோல்வார்ட் (Laura Wolvaardt) 43 (75) ஓட்டங்கள் எடுத்த நிலையில் தீப்தி ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தஸ்மின் பிரிட்ஸ் சதம்
இந்த கூட்டணி 140 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் வந்த லாரா குட்டால் (9), மெஸோ (7) சொதப்ப, சுனே லூஸ் 28 (34) ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து ட்ரையோன் 18 (22) ஓட்டங்கள் எடுக்க, அன்னெரி டெர்க்சன் 20 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாசினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், தொடக்க வீராங்கனை தஸ்மின் பிரிட்ஸ் (Tazmin Brits) சதம் விளாசினார். 107 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 109 ஓட்டங்கள் குவித்த நிலையில், ஸ்நேஹ் ராணா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கிளாஸ் (2) 49வது ஓவரிலும், லாபா (8) கடைசி ஓவரில் ரன்அவுட் ஆக, தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவரில் 261 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
சுழற்பந்து வீச்சில் மாயாஜாலம் காட்டிய ஸ்நேஹ் ராணா 5 விக்கெட்டுகளையும், அருந்ததி, சாரணி மற்றும் தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |