வாடிக்கையாளர் கசக்கி வீசிய லொட்டரி சீட்டுக்கு 1 மில்லியன் டொலர் பரிசு: கடை உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் வாடிக்கையாளர் தவறுதலாக கசக்கி வீசிய லொட்டரி சீட்டு பரிசுக்கு தெரிவான நிலையில், அந்த கடையின் உரிமையாளரின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
மாசசூசெட்ஸ் மாகாணத்தில் ஒரு பல்பொருள் அங்காடியில் வாடிக்கையாளர் ஒருவர் தவறுதலாக லொட்டரி சீட்டு ஒன்றை கசக்கி வீசியுள்ளார்.
அந்த லொட்டரி சீட்டானது வழக்கமான வாடிக்கையாளரான Lea Rose Fiega என்பவருக்கு சொந்தமானது. 30 டொலருக்கான அந்த லொட்டரி சீட்டை அவர் தவறுதலாக கடைக்குள் வைத்தே கசக்கி வீசியுள்ளார்.
சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பிறகு கடை உரிமையாளரின் மகனான அப்தி ஷாவிடம் அந்த லொட்டரி சீட்டு சிக்கியுள்ளது. அவர் அதை பரிசோதித்ததில், அந்த சீட்டுக்கு 1 மில்லியன் டொலர் பரிசு விழுந்திருந்தது.
இதை அறிந்த ஷாவுக்கு ஒரே மனக் குழப்பம், லொட்டரி சீட்டை தாம் வைத்துக் கொள்வதா, இல்லை தங்களுக்கு நன்கு அறிமுகமான அந்த வாடிக்கையாளருக்கு அளித்து விடலாமா?
மனக் குழப்பம் தீர, ஷா நடந்த சம்பவத்தை தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களோ, முடிவெடுக்கும் பக்குவம் உனக்கு இருக்கிறது, நீயே சரியான முடிவெடு என தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் பதிலால் மேலும் குழப்பமடைந்த ஷா, இந்தியாவில் வசிக்கும் தமது தாத்தா- பாட்டியிடம் நடந்தவற்றை கூறி ஆலோசனை கேட்டுள்ளார்.
அவர்கள் உடனையே, அந்த லொட்டரி சீட்டை வாடிக்கையாளரிடமே திருப்பித் தர கோரியுள்ளனர். மட்டுமின்றி, அந்த பணம் நமக்கானது அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஷா அந்த வாடிக்கையாளரை நேரில் சந்தித்து குறித்த லொட்டரி சீட்டை ஒப்படைத்துள்ளார்.
ஷாவின் இச்செயல் அந்த வாடிக்கையாளர் குடும்பத்தை நெகிழ வைத்துள்ளதுடன், அப்பகுதி மக்களின் பாராட்டுதலையும் பெற வைத்துள்ளது.