உக்ரைன் விவகாரத்தில் சில வாரங்களில் முடிவெடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்யாவின் போர் குற்றங்கள் அம்பலமாகிவரும் நிலையில், இன்னும் சில வாரங்களுக்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen உறுதி அளித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு அதிகாரப்பூர்வ உறுப்பினர் கேள்வித்தாளை அடையாளமாக அவர் வழங்கியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக மாறுவதற்கு பொதுவாக பல ஆண்டுகள் ஆகும், மேலும் பல சுற்று விண்ணப்பங்கள், சரிபார்ப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் என பல மாதங்கள் நீளும் செயல்முறை அது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கான முயற்சிகள் மேற்கொண்ட நிலையிலேயே 2014ல் ரஷ்யா முதன் முறையாக உக்ரைன் மீது தாக்குதல் முன்னெடுத்தது மட்டுமின்றி, கிரிமியா நகரை ஆக்கிரமித்து சர்ச்சைக்குரிய பகுதியாக அறிவித்தது.
உக்ரைன் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு கூட்டாண்மை மற்றும் ஐரோப்பிய அண்டை நாடு கொள்கையில் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பு என்பது உக்ரேனின் இருப்பு மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்பின் மீதும் நேரடித் தாக்குதல் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.