பிரித்தானியாவில் குடியிருப்பில் தீ விபத்து: 2 சிறுவர்கள் உயிரிழப்பு: 30 வயது பெண் அதிரடி கைது
பிரித்தானியாவில் 2 சிறுவர்கள் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 சிறுவர்கள் உயிரிழப்பு
பிரித்தானியாவின் வால்வர்ஹாம்ப்டன்(Wolverhampton) மேசன் தெருவில் அமைந்துள்ள குடியிருப்பு வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.
இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த 1 வயது மற்றும் 3 வயதுடைய இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டிலிருந்த ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் என மூன்று பேர் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சையை அவசர சேவை அதிகாரிகள் பின்னர் வழங்கினர்.
பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாத காரணத்தினால் மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படவில்லை.
பெண் ஒருவர் கைது
இந்த தீ விபத்து சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சனிக்கிழமையான இன்று, அவர் தொடர்ந்து தடுப்பு காவலில் விசாரணைக்காக வைக்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீ விபத்து குறித்து பொதுமக்கள் வதந்திகளையோ அல்லது யூகங்களையோ பரப்ப வேண்டாம் என்று பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளது.
அதே சமயம் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |