பெண் கான்ஸ்டபிளை சீரழித்த பொலிஸ் மாமனார்; முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவர்
உத்தர பிரதேசத்தில் ஒரு பெண் கான்ஸ்டபிள் தனது மாமனாரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மீரட் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது.
சம்பவத்தன்று அப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த மாமனார் பெண்ணை சீரழித்துவிட்டு, நடந்ததைப் பற்றி வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அபீத் (Abid) என்பவரும் ஒரு காவல் அதிகாரி என்பதால், தனக்கு நடந்த கொடுமையை கணவனிடம் கூறியுள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
அபீத், தனது மனைவிக்கு உதவி செய்வதற்கு பதிலாக, முத்தலாக் சொல்லி அவரை விவாகரத்து செய்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் மாமனார் நசீர் அஹமதும் (Nazeer Ahmad), காஜியாபாத்தில் Provincial Arms Constabulary எனும் ரிசர்வ் பொலிஸ் படையில் காவலர் ஆவார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், பொலிஸார் கணவர் அபீத் மற்றும் அவரது தந்தை நசீர் அஹமத் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் புகாரின்படி, அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். பிறகு தனது கணவர் மற்றும் குடும்பத்தினரால் தொடர்ந்து வரதட்சணைக்காக துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
ஒரு பொலிஸ்கார குடும்பத்துக்குள் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.