விபத்தில் சிக்கிய பெண் காவலர்..காண சென்ற பெண் தலைமை காவலர் உயிரிழந்த பரிதாபம்
சென்னையில் விபத்தில் சிக்கிய உதவி காவல் ஆய்வாளரை காண சென்ற பெண் தலைமை காவலர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதவி ஆய்வாளரின் அழைப்பு
தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ரமா பிரபா. இவர் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலை அருகே நேற்று முன்தினம் பணி முடித்து விட்டு சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார்.
அவர் சென்ற இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் ரமா பிரபாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் உடன் பணிபுரியும் தலைமை பெண் காவலரான ஷீலா ஜெபமணியை (51) உதவிக்கு அழைத்துள்ளார்.
தகவல் கிடைத்ததும் ரமா பிரபாவைக் காண ஜெபமணி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அதிவேகமாக வந்த கார்
அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று அவரது வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெபமணி, தலையில் பலத்த அடிபட்டதால் மயக்கமானார். இதனையடுத்து அங்கிருந்தவர்களின் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு ஜெபமணி கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்குள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது . ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய நபர் கைது
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், காரை வேகமாக இயக்கிய விபத்தை ஏற்படுத்திய சக்தி (41) என்பவரை காது செய்தனர்.
பெண் தலைமை காவலர் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.