50 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இளம் தாயார்: ஒட்டுமொத்த நாட்டுமக்களையும் உலுக்கிய சம்பவம்
எல் சல்வடார் நாட்டில் சொந்த குழந்தையை படுகொலை செய்ததாக கூறி 21 வயது இளம் தாயாருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுமக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
கடந்த 2020 ஜூன் மாதம் மத்தியில், இரவு நேரம் Lesly Ramírez என்பவருக்கு கழிவறை செல்ல வேண்டும் என எழுந்துள்ளார். அப்போது 19 வயதான Lesly Ramírez 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
கழிவறைக்கு சென்ற அவருக்கு அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தமது உடம்பில் இருந்து எதுவோ வெளியேறுவதாக மட்டும் உணர்ந்ததாக கூறும் Lesly Ramírez, அன்றிரவு குறை மாதத்தில் பிள்ளையை பெற்றெடுத்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக கருச்சிதைவான நிலையில் தொப்புள்க்கொடியை துண்டிக்க முயன்றுள்ளார். இரவு நேரம், மின்சாரமும் அப்போது துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உடனடியாக அவர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட, ஒரு வாரத்திற்கு பின்னர் நீதிமன்ற விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டார்.
கருச்சிதைவு ஏற்பட்டதாக Lesly Ramírez எடுத்துக்கூறியும், சல்வடார் அதிகாரிகள் அதை ஏற்க மறுத்துள்ளதுடன், குறை மாதத்தில் பிறந்த தமது பிள்ளையை Lesly Ramírez ஆறு முறை கழுத்தில் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் அரசாங்க அதிகாரிகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பெண்கள் ஆதரவு இயக்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், இது அரசாங்க அதிகாரிகளின் கற்பனை எனவும் கொந்தளித்துள்ளனர்.

இந்த நிலையில், சொந்த குழந்தையை படுகொலை செய்த குற்றத்திற்காக Lesly Ramírez 50 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார். கருக்கலைப்பை ஆதரிக்கும் குழுக்கள் தற்போது இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகக் கடுமையான கருக்கலைப்பு எதிர்ப்புச் சட்டங்களைக் கொண்டுள்ள நாடு எல் சால்வடார். தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் மருத்துவ ரீதியான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எல் சால்வடார் மட்டுமின்றி நிகரகுவா, ஹோண்டுராஸ் மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய லத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகள் விதிவிலக்குகள் ஏதுமின்றி கருக்கலைப்பை தடை செய்துள்ளன.
மேலும், Lesly Ramírez போன்று இன்னும் நான்கு பெண்கள் எல் சால்வடார் நாட்டில் இதே குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        