சென்னை ரயில் நிலையத்தில் மாணவி கொலை! அதிர்ச்சியில் தந்தை மரணம்
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாணிக்கம் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 47), ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவர்களது மகள் சத்தியப்பிரியா (20) தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தினமும் மதியம் பரங்கிமலை ரெயில்நிலையத்துக்கு வந்து அங்கிருந்து மின்சார ரெயில் மூலம் தியாகராயநகர் செல்வது வழக்கம்.
இவரது வீட்டிற்கு எ திரே ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரது மகன் சதீஷ்(23), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே சத்யாவின் வீட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
காரணம் சதீஷ் படித்துவிட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர்சுற்றித்திரிந்துள்ளார், இதனால் சத்யா, சதீஷை விட்டு விலகத்தொடங்கியுள்ளார்.
இருப்பினும் சதீஷ் தொடர்ந்து சத்யாவை பின்தொடர்ந்து வந்துள்ளார், சம்பவ தினத்தன்றும் இருவருக்கும் ரயில்நிலையத்தில் வைத்து வாக்குவாதம் நடந்துள்ளது.
ஒருகட்டத்தில் கடும்கோபமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயிலின் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார்.
இதில் ரயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சதீஷ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.
இதற்கிடையே மகள் உயிரிழந்த துக்கத்தில் அவரது தந்தை மாணிக்கம் மாரைடைப்பால் இன்று காலை உயிரிழந்தார்.