பிரபல நடிகரை காதலிப்பதாக நம்பி 700,000 பவுண்டுகளை இழந்த பெண்: நடிகரின் பதில்
பிரான்ஸ் நாட்டவரான பெண்ணொருவர், பிரபல நடிகரான பிராட் பிட்டை காதலிப்பதாக எண்ணி, மோசடி நபர் ஒருவரிடம் சுமார் 700,000 பவுண்டுகளை இழந்ததைக் குறித்த செய்தி இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.
பிரபல நடிகரை காதலிப்பதாக நம்பிய பெண்
பிரான்ஸ் நாட்டவரான ஆன் (Anne, 53) என்னும் பெண், இணையம் வாயிலாக பிரபல நடிகரும், பிரபல நடிகையான ஏஞ்சலினா ஜோலியின் முன்னாள் கணவருமான பிராட் பிட் என தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஒரு நபரை காதலித்துவந்துள்ளார்.
தன்னை பிராட் பிட் என்று அறிமுகம் செய்துகொண்ட அந்த நபர், ஒரு கட்டத்தில், தான் ஏஞ்சலினா ஜோலியை விவாகரத்து செய்வதால் தனது வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், தனது புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அவரை பிராட் பிட் என்றே முழுமையாக நம்பிவிட்ட ஆன், 700,000 பவுண்டுகள் பணம் அனுப்பியுள்ளார். அத்துடன், அவருக்காக தன் கணவரையே விவாகரத்து செய்துள்ளார் ஆன்.
இந்நிலையில், ஏஞ்சலினா ஜோலியைப் பிரிந்த பிராட் பிட், Inés de Ramon என்னும் பெண்ணைக் காதலிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிராட் பிட்டும் Inés de Ramonம் இணைந்திருக்கும் புகைப்படங்களைப் பார்த்தபிறகுதான், தான் ஏமாற்றப்பட்டுவிட்டதே ஆனுக்கு தெரியவந்துள்ளது.
நடிகர் தரப்பிலிருந்து ஒரு செய்தி
இந்நிலையில், தான் என நம்பி யாரையோ ஏமாந்த ஆனுக்கு, நடிகர் பிராட் பிட் தரப்பிலிருந்து ஒரு செய்தி வந்துள்ளது.
நடிகர்களுக்கும் அவர்களுடைய ரசிகர்களுக்கும் இடையில் காணப்படும் வலிமையான பிணைப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடியாளர்கள் ஏமாற்றும் விடயம் பயங்கரமானது என்று கூறியுள்ளார் பிராட் பிட்டின் செய்தித்தொடர்பாளர்.
இன்னொரு விடயம், குறிப்பிட்ட பிரபலம் சமூக ஊடகங்களில் இருக்கிறாரா என்பதே தெரியாமல், அவர் தொடர்பு கொள்வதாக நினைத்து ஒன்லைனில் யாரையும் நம்பி ஏமாறக்கூடாது என்பதற்கு ரசிகர்களுக்கு இது ஒரு பாடம் என்றும் கூறியுள்ளார் அவர்.
இதற்கிடையில், தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக ஆன் பொலிசில் புகாரளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |