சுற்றுலா செல்வதாகக் கூறிச் சென்ற பெண்: சுவிட்சர்லாந்திலிருந்து வந்த அதிரவைத்த செய்தி
அயர்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் சுற்றுலா செல்வதாகக் கூறிவிட்டு புறப்பட்ட நிலையில், அவரது மகளுக்கு வந்த குறுஞ்செய்தி ஒன்றால் அவரது குடும்பம் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது.
சுவிட்சர்லாந்திலிருந்து வந்த செய்தி
அயர்லாந்திலுள்ள Cavan என்னுமிடத்தைச் சேர்ந்தவர் மௌரீன் (Maureen Slough, 58). ஜூலை மாதம் 8ஆம் திகதி, தன் தோழியுடன் லிதுவேனியா நாட்டுக்கு சுற்றுலா செல்வதாக தன் குடும்பத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார் மௌரீன்.
ஆனால், மறுநாள் இரவு, மௌரீனுடைய மகளான மேகனுக்கு (Megan Royal) ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை அனுப்பியவர் மௌரீனுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். உன் தாய் சுவிட்சர்லாந்துக்குச் சென்றிருக்கிறார்.
யாரிடமும் சொல்லவேண்டாம் என என்னிடம் சத்தியம் வாங்கியிருக்கிறார் உன் தாய்.
ஆனால், ஒரு மகளாக உனக்கு இந்த விடயம் தெரியவேண்டும் என நான் நினைக்கிறேன்.
ஏனென்றால், மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார் என்று கூறியுள்ளது அந்த குறுஞ்செய்தி.
மேகன் அதிர்ச்சியும் அழுகையுமாக தன் தந்தையை மொபைலில் அழைக்க, அவர் தன் மனைவியை தொடர்புகொள்ள முயன்றும் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லையாம். மறுநாள், மேகனுக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அது, சுவிட்சர்லாந்திலுள்ள Pegasos என்னும் நிறுவனத்திலிருந்து வந்துள்ளது. Pegasos, மருத்துவர்கள் உதவியுடன் மக்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள உதவும் ஒரு அமைப்பு.
மௌரீன் மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அந்த செய்தி தெரிவிக்க, அவர் எதனால் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது புரியாமல், குழப்பத்திலும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது அவரது குடும்பம்.
ஆகத்து மாதம் மௌரீனுடைய அஸ்தி அவரது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், சுற்றுலா சென்றதாக கூறிச் சென்ற மௌரீனுக்கு இறுதிச்சடங்கு செய்யும் நிலை ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |