வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு
Bengaluru woman stranded in London, airline fined Rs 1.6 Lakh: பெங்களூருவிற்கு செல்லும் நோக்கில் விமானத்தில் பயணித்த ஒரு பெண், விமான நிறுவனம் மேற்கொண்ட தவறான வழிமாற்றத்தால் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பல மணி நேரங்கள் சிக்கி தவித்துள்ளார்.
விமானம் திடீரென ரத்து
கனடாவில் கல்வி பயிலும் பத்ரப்ரியா என்ற பெண், பெங்களூருவிற்கு வருவதற்காக EaseMyTrip மூலம் ரூ.1,38,945 மதிப்பில் விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
ஆனால், அவர் பயணிக்க இருந்த WestJet விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், மாற்று வழியாக Calgary-London-Bengaluru என புதிய பாதை வழங்கப்பட்டது.

போர்டிங் பாஸ் வழங்க மறுக்கப்பட்டது
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் British Airways மூலம் பெங்களூருவுக்கு செல்ல வேண்டிய நிலையில், அவருக்கு UK விசா இல்லாததால் போர்டிங் பாஸ் வழங்க மறுக்கப்பட்டது. இதனால் அவர் விமான நிலையத்தில் உணவு, தங்குமிடம், சுமைகள் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி சிக்கினார்.
இறுதியில், கனடாவில் உள்ள நண்பரிடம் பண உதவி பெற்று, Etihad Airways மூலம் புதிய டிக்கெட் வாங்கி, ரூ.1,65,926 செலவில் பெங்களூருவை அடைந்தார்.
வழக்கு
British Airways, அவர் “no-show” என Toronto-London பயணத்தில் பதிவு செய்யவில்லை என்று வாதிட்டது. ஆனால், WestJet விமானம் ரத்து செய்யப்பட்டதால், மாற்று வழியாக லண்டன் வந்ததாக அவர் நிரூபித்தார்.
British Airways தனது குற்றச்சாட்டை ஆதரிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்காததால், நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்தது.
இழப்பீடு செலுத்த உத்தரவு
நுகர்வோர் நீதிமன்றம் EaseMyTrip மற்றும் WestJet மீது குற்றம் சாட்டவில்லை. ஆனால் British Airways, பயணியிடம் உரிய உதவி வழங்க தவறியதாகக் கருதி, முழு டிக்கெட் தொகை ரூ.1,38,945, கூடுதலாக ரூ.25,000 இழப்பீடு, ரூ.2,000 வழக்கு செலவுகள் என மொத்தம் ரூ.1,65,945 செலுத்த உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு, விமான நிறுவனங்கள் பயணிகளின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்பதற்கான முக்கியமான எச்சரிக்கையாகும். பயணிகள் அனுமதி இல்லாமல் வழிமாற்றம் செய்வது, குறிப்பாக விசா இல்லாத நாடுகளில் இறங்கச் செய்வது, அவர்களின் வாழ்க்கையில் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |