ஜெயிலுக்கு செல்வதற்காக வேண்டுமென்றே குற்றம் செய்யும் 81 வயது மூதாட்டி.., பின்னணியில் இருக்கும் காரணம்
81 வயது மூதாட்டி ஒருவர் சிறையில் தங்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்.
பின்னணி என்ன?
ஜப்பானில் அகியோ என்ற 81 வயதான மூதாட்டி, சிறையில் தங்க வேண்டும் என்பதற்க்காக வேண்டுமென்றே திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். இது நாட்டின் வளர்ந்து வரும் வயதான மக்கள்தொகை நெருக்கடியை சுட்டி காட்டுகிறது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் அறிக்கையின்படி, உணவைத் திருடியதற்காக அவர் முதலில் தனது 60 வயதில் சிறையில் அடைக்கப்பட்டார், பின்னர் அவரது ஓய்வூதியத்தில் உயிர்வாழ்வது கடினமாக இருந்தபோது மீண்டும் குற்றத்தை செய்தார்.
டோக்கியோவிற்கு வடக்கே அமைந்துள்ள ஜப்பானின் மிகப்பெரிய பெண்கள் சிறையான தோச்சிகி பெண்கள் சிறைக்கு அகியோ அனுப்பப்பட்டார். இந்த சிறையில் கிட்டத்தட்ட 500 கைதிகள் உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் வயதானவர்கள். இது ஒரு சிறிய பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்துதான் கடைகளில் திருடியதாக ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் நிதி நெருக்கடியால் வேறு வழியில்லாமல் திருடியுள்ளார்.
நிதி ரீதியாக நிலையான மற்றும் வசதியான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்திருந்தால் நிச்சயமாக அதைச் செய்திருக்க மாட்டேன் என்று அகியோ கூறுகிறார்.
மேலும் அவர், "வெளியில் தனியாக இருப்பதை விட அங்குள்ள வாழ்க்கை நிலையானதாக உள்ளது. இந்தச் சிறையில் மிகவும் நல்லவர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் நிலையானதாக இருக்கலாம்" என்று கூறினார்.
சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, அகியோ தனது 43 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், அவர் அகியோவை அடிக்கடி வெளியேறும்படி கூறியுள்ளார்.
பின்னர், ஒக்டோபர் 2024 -ல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும், மகனுடன் இருப்பதற்கு பயத்துடனும், அவமானத்துடனும் இருந்துள்ளார்.
சிறை அதிகாரி தகயோஷி ஷிரனகா கூறுகையில், "பல வயதான கைதிகள் வெளியில் கைவிடப்படுவதை விட சிறை வாழ்க்கையை விரும்புகிறார்கள்" என்றார்.
உலகில் மிக வேகமாக வயதான மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஜப்பான் ஒன்றாகும். அரசாங்க தரவுகளின்படி, 2024 இல் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 36.25 மில்லியனாக உயர்ந்துள்ளது.
ஜப்பானின் மொத்த மக்கள்தொகையில் முதியோர்கள் இப்போது 29.3% ஆக உள்ளனர். அதிகரித்து வரும் ஆயுட்காலம் மற்றும் பிறப்பு விகிதம் குறைவதால், ஜப்பான் தனது வயதான குடிமக்களைப் பராமரிப்பதில் சவால்களை எதிர்கொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |