மாஸ்க் அணிய சொன்னதற்காக சாரதியை தாக்கிய இளம்பெண்... வெளியிட்ட மோசமான வீடியோ: தலைகீழாக மாறிய கதை
தனது காரில் பயணித்த இளம்பெண்களை மாஸ்க் அணியச் சொன்னதற்காக, சாரதி ஒருவர் மீது இனரீதியாக இளம்பெண்கள் சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேபாளத்தைச் சேர்ந்த சுபாகர் கட்கா (32) என்பவர், சான் பிரான்சிஸ்கோவில் உபேர் சாரதியாக பணி செய்துவருகிறார்.
கடந்த வார இறுதியில், மூன்று இளம்பெண்களை தன் காரில் ஏற்றிக்கொண்ட சுபாகர், அவர்களில் ஒரு பெண் மாஸ்க் அணியாததால் அவரை மாஸ்க் அணியச் சொல்லியிருக்கிறார்.
அத்துடன், அவரிடம் மாஸ்க் இல்லையென்றால், வாங்கிக்கொள்வதற்கு வசதியாக பெட்ரோல் நிலையம் ஒன்றில் காரை நிறுத்தியிருக்கிறார் சுபாகர்.
ஆனால், அந்த பெண்களோ சுபாகரை கெட்ட வார்த்தையால் திட்டியதோடு, அவரிடம் மோசமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்.
சுபாகரின் காரில் இருந்த கமெராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
அதில், ஒரு பெண் சுபாகரின் முகத்துக்கு அருகே வந்து வேண்டுமென்றே இருமுவதையும், கத்திக்கொண்டே அவரது மொபைலை பிடுங்குவதையும், அவரது மாஸ்கை பிய்த்து எறிவதையும் காணலாம்.
அத்துடன், மற்றொரு பெண் கண் எரிச்சலை உண்டாக்கும் பெப்பர் ஸ்பிரேயை காருக்குள் அடித்திருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுபாகர் புகாரளித்ததைத் தொடர்ந்து, பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள்.
இதற்கிடையில், சுபாகரின் முகத்தில் இருமிய Arna Kimiai (24) என்ற பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தான் விட்டால், சுபாகரை அடித்திருப்பேன் என்றும் தப்பியது அவரது அதிர்ஷ்டம் என்றும் கூறியிருந்ததுடன், உபேர் மற்றும் லிஃப்ட் ஆகிய நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்போவதாகவும் மிகவும் திமிராக பேசியிருந்தார்.
ஆனால், அவர் எதிர்பாராதவிதமாக இன்று கதை தலைகீழாக மாறிவிட்டது. உபேர் மற்றும் லிஃப்ட் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை பயன்படுத்த முற்றிலுமாக Arnaவுக்கு தடை விதித்துவிட்டன.
அத்துடன், காருக்குள் பெப்பர் ஸ்பிரேயைத் தெளித்த Malaysia King (24) என்ற பெண், பாதுகாப்பு விதிகளை மீறி ரசாயனம் ஒன்றை தாக்கும் ரீதியில் பயன்படுத்தியதாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், வீடியோ வெளியிட்டு ஜம்பமடித்த Arna, இன்னும் சற்று நேரத்தில் சான் பிரான்சிஸ்கோ பொலிசாரிடம் சரணடைய இருப்பதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.


