5 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த விபரீதம்! 150 அடி உயரத்திலிருந்து விழுந்து இறந்த பெண்ணின் புகைப்படம் வெளியீடு
பிரித்தானிய சுற்றுலா தலத்தில் 150 அடி குன்றிலிருந்து விழுந்து உயிரிழந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் விவரங்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தில் டோர்செட் மாகாணத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான Durdle Door அருகே, கடந்த திங்கட்கிழமை 150 அடி உயர குன்றிலிருந்து ஒரு பெண் பாறையின்மீது விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்பெண்ணின் பெயர் Tahira Jabeen (40) என்பதும், அவர் பிர்மிங்காமை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவரது புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அவருக்கு 5 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். தாஹிரா தனது மகள்களுடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக கடற்கரைக்கு சென்றிருந்த போதுதான் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. அப்போது சுமார் 200-க்கும் மேற்பட்ட சுற்றுலாவாசிகள் கடற்கரையில் இருந்தனர்.
கடற்கரையில் நின்றுகொண்டிருந்த தனது 20 வயது மதிக்கத்தக்க மகளைப் பார்த்து, 'இதோ நான் வருகிறேன், நான் வருகிறேன்' என கூச்சலிட்டபடி, குன்றின் மேலிருந்து படிக்கட்டுகள் வழியாக இறங்காமல், புற்கள் நிறைந்த வேறொரு பாதையில் வேகமாக கீழே இறங்கியுள்ளார்.
அப்போது, அவர் தடுமாறி தனது மகள் பார்க்கும்போதே 100 அடிக்கு கீழே உள்ள ஒரு பாறையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அவருடன் வேலை பார்ப்பவர்கள், அக்கம்பக்கத்தினர் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.