காணாமல் போன திருமணமான இளம்பெண் 8 மாதங்களுக்கு பின்னர் எலும்புக்கூடாக கண்டுபிடிப்பு! அதிரவைக்கும் பின்னணி
தமிழகத்தில் இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்டு 8 மாதங்களுக்கு பிறகு அவரின் சடலம் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபிரியா (21). இவருக்கும் வசந்தபாண்டி (26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பேறுகாலத்திற்காக அருப்புக்கோட்டைக்கு வந்த சத்யபிரியா குழந்தை பெற்றும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தந்தையுடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் சத்யபிரியாவுக்கும், சாத்தூர் கம்மாச்சூரங்குடியை சேர்ந்த ஞானகுருசாமி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் தவறான உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இதை தொடர்ந்து சத்திய பிரியா ஞானகுருசாமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். திருமணம் செய்து கொள்ளாவிட்டால் ஞானகுருசாமி பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினாராம்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் திகதி வேலைக்கு சென்ற சத்ய பிரியா, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
மகளை காணாதது குறித்து தந்தை லிங்கம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ம் திகதி பொலிஸ் புகார் செய்தார். இதன் அடிப்படையில் கடந்த 8 மாதங்களாக விசாரணை நடத்திய பொலிசார் சத்தியபிரியாவின் மொபைல் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவருடன் அடிக்கடி பேசியவர் ஞானகுரு சாமி என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஞானகுரு சாமியை பிடித்து விசாரித்த போது அவர், சத்யபிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காரணத்தால் சாத்தூர் போக்குவரத்து நகர் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் திகதி அழைத்து சென்றேன்.
அங்கு சத்யபிரியாவை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். கொலை செய்துவிட்டு உடலை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து ஞானகுருசாமியை கைது செய்த பொலிசார் எலும்புக்கூடாக இருந்த சத்யபிரியா சடலத்தை மீட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.