இலங்கைக்கு எதிராக முதல் சதம்! ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றிய நியூசிலாந்து அணி
இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
ஜார்ஜியா ப்லிம்மர் சதம்
Saxton Oval மைதானத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 280 ஓட்டங்கள் குவித்தது. முதல் ஒருநாள் சதம் விளாசிய ஜார்ஜியா ப்லிம்மர் (Georgia Plimmer) 112 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும்.
அணித்தலைவர் சுஸி பேட்ஸ் 53 ஓட்டங்களும், ப்ரூக் ஹாலிடே 36 ஓட்டங்களும், மேடி கிரீன் 32 ஓட்டங்களும் எடுத்தனர். சுகந்திகா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி ஜெஸ் கெர்ரின் அபார பந்துவீச்சில் தொடக்க விக்கெட்டுகளை இழந்தது.
கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா கூட்டணி ஓரளவு ஓட்டங்களை சேர்த்தது. கவிஷா 45 (54) ஓட்டங்களும், நிலக்ஷி டி சில்வா 45 (73) ஓட்டங்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து வெற்றி
அதன் பின்னர் வந்த வீராங்கனைகள் சொதப்ப, இலங்கை அணி 182 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜெஸ் கெர், பிரான் ஜோனஸ் தலா 3 விக்கெட்டுகளும், ப்ரூக் ஹாலிடே மற்றும் கிரீன் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
முதல் போட்டி மழையால் நின்றதால் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுதாக வென்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி, மார்ச் 14ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |