கமலா ஹாரிஸ் எதுவும் சாத்தியமே என்பதை எங்களுக்கு உணர்த்திவிட்டார் : கனடாவிலிருந்து உரக்க ஒலிக்கும் குரல்கள்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுள்ள முதல் வெள்ளையரல்லாத பெண்மணியான கமலா ஹாரிஸ், எதுவும் சாத்தியமே என்பதை எங்களுக்கு உணர்த்திவிட்டார் என்கிறார்கள் கனடாவில் வாழும் வெள்ளையரல்லாத பெண்கள்.
அமெரிக்காவில் அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்ததென்னவோ உண்மைதான்... ஆனால், அமெரிக்க துணை அதிபர் பதவியேற்ற நிகழ்வை, ஒரு வரலாற்று நிகழ்வாக உலகமே கூர்ந்து நோக்கியது இதுதான் முதல் முறை எனலாம்.
அதற்கு காரணம், இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ். அவர் இந்திய வம்சாவளியினர் மட்டுமல்ல, ஜமைக்கா வம்சாவளியினரும்கூட, ஆம், அவரது தந்தை ஜமைக்கா நாட்டில் பிறந்தவர்.
ஆகவே, அவரை தங்கள் பிரதிநிதியாக பார்க்கிறார்கள் வெள்ளையரல்லாத மக்கள்... குறிப்பாக பெண்கள்! கமலா ஹாரிஸ் கலிபோர்னிய அட்டர்னி ஜெனரல் பதவிக்கு போட்டியிட்டதிலிருந்தே அவரை பின் தொடர்வதாக தெரிவிக்கிறார்கள் கனேடியர்களான Shikha Hamiltonம் அவரது மகளான Avaniயும்.
கமலா ஹாரிஸ் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அந்த கணம் உணர்ச்சிப்பூர்வமனதாக இருந்தது என்று கூறும் Shikha, தங்களால் கண்ணீரை அடக்கிக்கொள்ள இயலவில்லை என்கிறார்.
ஒரு சிறு பெண்ணாக இருக்கும்போது அவரை சந்தித்தேன் என்று கூறும் Avani, கமலா ஹாரிஸின் சாதனைகளால் உத்வேகம் கொண்ட வெள்ளையரல்லாத பல பெண்களில் தானும் ஒருவராக உணர்வதாக தெரிவிக்கிறார். பல பெண்கள் இன்று அவரில் தங்களைக் காண்கிறார்கள் என்கிறார் Avani.
.நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் எங்கிருந்து வந்தாலும் சரி, நீங்கள் பெண்ணாக இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துவிட்டார் கமலா ஹாரிஸ் என்கிறார் Avani.
மொன்றியலில் வாழும் Kanga, ஒரு படி மேலே போய், கமலா ஹாரிஸ் மொன்றியலில் வாழ்ந்தார் என்று தெரிந்ததும் அவருடன் தனக்கு மன ரீதியாக ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிட்டது என்கிறார்.
கமலா ஹாரிஸை கொண்டாடுகிறார்கள் பெண்கள், அவரே இதை எதிர்பார்த்திருப்பாரா, தெரியவில்லை!

