தடுப்பூசியால் இரத்தக்கட்டிகள் உருவாகி இறந்த ஆறு பேரும் பெண்கள்: என்னதான் பிரச்சினை? கனடா ஆய்வாளர்களின் பதில்
தடுப்பூசி போட்டுக்கொண்டபின்னர் இரத்தக்கட்டிகள் உருவாகி உயிரிழந்த ஆறுபேருமே, குழந்தை பெறும் வயதிலுள்ள பெண்கள்! பயத்தை ஏற்படுத்தும் ஒரு விடயம்தான், மறுப்பதற்கில்லை... இன்னொரு பக்கம், ஹார்மோன் வகை குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கனேடிய ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள்? இப்போதைக்கு இது ஆரம்பகட்ட தகவல் மட்டுமே என்று கூறும் Hamilton பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றும் Dr. மேனகா பை, இப்போதைக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்கிறார்.
அத்துடன், தடுப்பூசிகளுக்கும் குடும்பக் கட்டுப்பாடு ஹார்மோன்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
குடும்பக் கட்டுப்பாட்டு உபகரணங்களால் இரத்தக்கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றாலும், அந்த இரத்தக்கட்டிகளுக்கும் தடுப்பூசியால் ஏற்படும் இரத்தக்கட்டிகளுக்கும் வித்தியாசம் உள்ளது என்கிறார்கள் அவர்கள்.
அதேபோல், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி போட்டுக்கொண்டபின் இரத்தக்கட்டிகள் உருவான பெண்கள் யாரும் கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்தவில்லை.
அத்துடன் அவர்களில் பெரும்பாலானோருக்கு ஏற்கனவே வேறு உடல் நலப் பிரச்சினைகள் இருந்துள்ளன. உயர் இரத்த அழுத்தம், அதிக அளவு தைராய்டு, ஆஸ்துமா மற்றும் உடல் பருமன் ஆகிய பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்துள்ளன.
ஆகவே, உண்மையாகவே தடுப்பூசிக்கும் இரத்தக்கட்டிகளுக்கும் என்ன பிரச்சினை என்பதை தெளிவாக அறிய மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் 18 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்டவர்களானாலும் சரி, இல்லையானாலும் சரி, ஒருவருக்கு கொரோனாவால் ஏற்படும் பாதிப்பைவிட, தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்பு மிக மிகக் குறைவு என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார் Georgetown பல்கலைக்கழக வைராலஜி துறை நிபுணரான Dr. ஏஞ்சலா ரஸ்முசன்.
Dr. ஏஞ்சலா, தானும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசி
போட்டுக்கொண்ட நிலையில், கவலைப்படாதீர்கள், இந்த இரத்தக்கட்டிகள்
தடுப்பூசியுடன் தொடர்புடையதாகவே இருந்தாலும், அது மிகவும் அபூர்வமாகவே யாரோ
ஒருவருக்கே ஏற்படும், அந்த ஒருவர் நீங்களாக இருக்க வாய்ப்பு மிகவும் குறைவே
என்கிறார்.