கல்லூரியில் மோசமான ஆங்கில பேச்சால் கேலி செய்யப்பட்டவர்.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை
மோசமான ஆங்கிலப் பேச்சுத் திறன் காரணமாக கல்லூரியில் கேலி செய்யப்பட்ட பெண் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
யார் அவர்?
இன்றைய காலகட்டத்தில், ஆங்கிலம் என்பது வெறும் மொழியாக மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் அவசியமாக உள்ளது.
பல சமயங்களில், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாதவர்கள், பல்வேறு துறைகளில் பணியை தொடர முடியாமல் உள்ளனர்.
அந்தவகையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ஆங்கிலப் பேச்சுத் திறனால் அவமானத்தை சந்தித்து வெற்றி கண்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சுரபி கௌதம். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர், தாயார் ஒரு ஆசிரியர்.
சுரபி கௌதம் எந்தவித பயிற்சியோ, கல்விக் கட்டணமோ இல்லாமல் தனது 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதினார். சுய படிப்பு மற்றும் பள்ளிப்படிப்பை நம்பி, இரண்டு வாரியத் தேர்வுகளிலும் 90 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றார்.
பள்ளிப் படிப்புக்குப் பிறகு மாநில பொறியியல் நுழைவுத் தேர்வை எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெற்றார். இவர் இந்தி-நடுத்தரப் பள்ளியில் படித்ததால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது.
இதையடுத்து போபால் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் பிடெக் பட்டம் பெற்றார். பட்டப்படிப்பு தேர்வில் முதலிடம் பிடித்து, தனது திறமைக்காக தங்கப் பதக்கம் பெற்றார்.
இதனிடையே கல்லூரி காலத்தில் தனது ஆங்கிலத் திறமைக்காக பலமுறை கேலி செய்யப்பட்டார். இதன் பிறகு, ஆங்கிலத்தில் தினமும் 10 புதிய சொற்களைக் கற்றுக்கொண்டார்.
மேலும், நூலகத்திலிருந்து பொறியியல் ஆங்கிலப் புத்தகங்களைக் கொண்டு வந்து, அந்த மொழியைப் பயிற்சி செய்யத் தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் தனது செமஸ்டர் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுதி பல்கலைக்கழகத்தில் முதலிடம் பிடித்தார்.
அதன் பிறகு, பல போட்டித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றார். பின்னர், ISRO, BARC, IES, மற்றும் UPSC IAS உள்ளிட்ட முக்கிய தேர்வுகளில் முதலிடத்தைப் பிடித்தார். 2016 ஆம் ஆண்டில், UPSC CSE-யில் AIR 50 மதிப்பெண் பெற்று ஐஏஎஸ் அதிகாரியானார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |