பல தடைகளைத் தாண்டி சீனாவுக்குள் நுழைந்தனர் உலக சுகாதார அதிகாரிகள்: கொரோனா எப்படி உருவானது என ஆராய களமிறங்கியது அணி
சீனாவின் வுஹானில் கொரோனா எப்படி உருவானது என்பதை ஆராய்வதற்காக, பல தடைகளைத் தாண்டி உலக சுகாதார அமைப்பின் 13 அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று வெற்றிகரமாக சீனாவுக்குள் நுழைந்துள்ளது.
உலக நாடுகள் பல, கொரோனா வைரஸை உருவாக்கியது சீனாதான் என குற்றம் சாட்டிக்கொண்டிருந்த நிலையில், அதை சீனா தொடர்ந்து மறுத்துவந்ததோடு, உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளை சீனாவுக்குள் சென்று ஆராயவும் அனுமதிக்க மறுத்துவந்தது.
13 பேர் கொண்ட குழு ஒன்று இம்மாதம் 14ஆம் திகதி சீனாவுக்குள் நுழைந்தது, 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டது.
இந்நிலையில், இன்று அந்த குழு ஆராய்ச்சிகளை தொடங்குவதற்காக களமிறங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
வரும் மாதங்களில், கொரோனா வைரஸ் எப்படி விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்பது குறித்து இந்த குழு ஆராய உள்ளது.
ஆனால், கொரோனா பரவலையே நீண்ட நாட்கள் மறுத்துவந்த சீனா, எந்த அளவுக்கு இந்த ஆய்வுக்கு ஒத்துழைக்கும் என்பது சந்தேகமான ஒரு விடயமே.
காரணம், எந்த ஆய்வகத்திலிருந்து கொரோனா வெளியானதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதோ, அந்த ஆய்வகத்துக்குள் நுழைய சீன அதிகாரிகள் அந்த குழுவுக்கு அனுமதியளிக்கவில்லையாம். ஆகவே, ஆய்வின் முடிவுகள் எப்படி இருக்குமோ தெரியவில்லை!



