அமெரிக்க கேபிடலில் நடந்த வன்முறைக்கு எதிராக உலக தலைவர்கள் கண்டனம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் கேபிடல் கட்டிடத்தை முற்றுகையிட்டதை அடுத்து வாஷிங்டனில் நடந்தேறிய வன்முறையை உலக தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த காங்கிரஸ் கூடிய கூட்டத்தை கலைக்க வலியுறுத்தி, டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதலை நடத்தினர். அவர்களில் சில ஆர்பாட்டக்காரர்கள் கவச உடைகள் மற்றும் துப்பாக்கிகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த கலவரத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு, அதிபரின் துண்டுதலுக்கு ஏற்ப நாடாளுமன்றத்தையே தாக்கிய சம்பவம் ‘ஜனநாயகத்தின் மீதான நேரடியான தாக்குதல்’ என பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ட்வீட் போட்ட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் "அமெரிக்கா உலகெங்கிலும் ஜனநாயகத்தை குறிக்கிறது, ஆனால் இப்போது அங்கு அமைதியம் ஒழுங்கான அதிகார மாற்றமும் நடக்க வேண்டிய அவசியத்தில் உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் கலவரக் காட்சிகளை பார்த்து அதிர்ந்த அவர் அவமானத்துக்குரிய காட்சிகள் என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் அமெரிக்க கேபிட்டலின் காட்சிகள் முற்றிலும் பயங்கரமானவை என்று ட்வீட் செய்துள்ளார்.
ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல், அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் கலகக்காரர்கள் என்றும், அந்தக் காட்சியில் இருந்து படங்களைப் பார்த்தபின் கோபமாகவும் சோகமாகவும் உணர்ந்ததாகவும் கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்க தேர்தல் முடிவைத் தகர்த்தெறிய காங்கிரசுக்குள் நுழைந்த கலகக்காரர்களுக்கும், கடந்த ஆண்டு ஹாங்காங்கின் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்குதல் நடத்திய ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்களுக்கும் இடையே சீனா ஒப்பிட்டுள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், ஹாங்காங்கில் நடந்த நிகழ்வுகள் வாஷிங்டனில் நடந்த நிகழ்வுகளை விட கடுமையானவை ஆனால் இங்கு ஒருவர கூட இறக்கவில்லை என்று சாடியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் தனது டீவீட்டில் உலகத்தின் பார்வையில், இன்று இரவோடு அமெரிக்காவின் ஜனநாயகம் முற்றுகையிடப்பட்டது என பதிவிட்டுள்ளார்.
கனடா நாட்டு மக்கள் ஜனநாயகம் மீதான தாக்குதலால் மிகுந்த மன உளைச்சலுடனும் வருத்தத்துடனும் உள்ளனர் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார், மேலும் வன்முறை ஒருபோதும் வெற்றிபெறாது.
அமெரிக்காவில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - அது நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாஷிங்டன் டி.சி.யில் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானேன்.
ஒழுங்கான மற்றும் அமைதியான அதிகார பரிமாற்றம் தொடர வேண்டும். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் அவுஸ்திரேலியா பிரதமர் அமெரிக்க கேபிடலில் நடந்த வன்முறை மிகுந்த துன்பத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

