விமான ஓடுபாதை நடுவே ரயில் செல்லும் ஒரே விமான நிலையம் - எங்கே தெரியுமா?
உலகின் ஒரே ஒரு விமான நிலையத்தில், விமான ஓடுபாதை நடுவே ரயில் செல்கிறது.
பொதுவாக பயணிகளின் வசதிக்காக விமான நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்கப்பட்டிருக்கும்.
விமான ஓடுபாதை நடுவே ரயில்
ஆனால் உலகின் ஒரே ஒரு விமான நிலையத்தில் மட்டும், விமான ஓடுபாதை நடுவே ரயில் செல்கிறது.
நியூசிலாந்தின் வடக்கு தீவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள கிஸ்போர்ன் விமான நிலையத்தில், விமான ஓடுபாதையின் குறுக்கே ரயில் செல்கிறது.
கிஸ்போர்ன் விமான நிலையம், 160 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம், வாரத்திற்கு 60க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஆண்டுதோறும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளை கையாளுகிறது.
இதில் தினமும் காலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை விமானம் மற்றும் ரயில் இயக்கப்படுகின்றன. அதன் பிறகு ஓடுபாதை மூடப்படும்.
இந்த விமான ஓடுபாதையின் இருபுறமும், ரயில் சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC) ரயில்வே சிக்னல்களைக் கட்டுப்படுத்தி, ரயிலை நிறுத்துவதற்கான சமிக்ஞையை வழங்குகிறது.
அதேபோல், ரயில் ஓடுபாதையைக் கடக்க வேண்டியிருக்கும் போது, ATC யிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
ஆண்டுக்கு 15 முறை
ரயில்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பான இயக்கத்திற்கு, விமானங்கள் மற்றும் ரயில்கள் இடையே மோதல் ஏற்படாத வகையில் இரண்டிற்குமான நேர அட்டவணையை விமான நிலைய ஊழியர்கள் நிர்வகிக்க வேண்டும்.
முரிவாய் மற்றும் கிஸ்போர்ன் இடையே நீராவி ரயில்கள் இந்த ஓடுபாதையின் வழியே இயக்கப்படுகிறது. பெரும்பாலும் கோடை மாதங்களில் பயணக் கப்பல்கள் வருகை தரும் போது இந்த நீராவி ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆண்டுக்கு, 15 முறை இந்த ரயில்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் உள்ள வின்யார்ட் விமான நிலையத்திலும் இதேபோன்ற ஓடுபாதை இருந்தது. 2005 ஆம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |